Published : 03 Apr 2022 05:47 PM
Last Updated : 03 Apr 2022 05:47 PM

மாற்றுத் திறனாளிகளுக்காக வேலைவாய்ப்பு முகாம்: நாளை தொடக்கம்- தமிழக அரசு

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்காக வேலைவாய்ப்பு முகாம் நாளை தொடங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், “ தமிழக அரசு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை, தமிழ்நாட்டில் துவங்குவதற்கும், திறம்பட நடத்துவதற்கும் தொழில்முனைவோர்களை உருவாக்கவும், பல்வேறு திட்டங்களையும், பயிற்சிகளையும், செயல்படுத்தி வருகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையகரகம் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக லோன் மேளா, தனியார்துறையில் வேலைவாய்ப்பு முகாம்கள், மற்றும் மாற்றுத் திறனாளிகளை தொழில் முனைவோர் ஆக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகள் சுயதொழிலில் ஈடுபட வங்கிக் கடனுதவியும் ஏற்பாடு செய்யப்படுகிறது. குறிப்பாக, மாற்றுத் திறனாளிகள் சுயதொழில்களில் ஈடுபடவும், சிறு, குறு தொழில்களில் அடியெடுத்து வைக்கவும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ரூபாய் 25,000 மானியம் அல்லது கடன் தொகையில் மூன்றில் ஒரு பகுதி மானியமாகவும், கடன் பெற்று, சுயதொழில் தொடங்க உதவி வருகிறது. மாற்றுத் திறனாளிகள் இந்த மானியத்துடன் கூடிய கடன் பெற்று சிறிய பெட்டிக்கடை, மளிகைக் கடைகள், பேன்சி ஸ்டோர்கள், பால்மாடு வளர்த்தல், ஆடு வளர்த்தல், டீக்கடை மற்றும் நொறுக்குத்தீனி ஸ்டால்கள், இட்லி கடைகள், டிபன் கடைகள், கணிணி மையங்கள். ஜெராக்ஸ் நகலகம் ஆகியவற்றை தொடங்கி பயனடைந்து வருகின்றனர்.

தமிழக தொழில் முனைவோருக்கான கல்வி மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை மேம்படுத்தும் விதமாக, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை (MSME) யின் கீழ் செயல்படும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (The Entrepreneurship Development and Innovation Institute (EDII) சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது.

தொழில் முனைவோருக்கான பயிற்சிகளை அவ்வப்பொழுது இந்நிறுவனம் நடத்தி வருகிறது. இப்பயிற்சிகள், திட்ட அறிக்கைகள் தயாரிக்கவும், இறுதி செய்யவும், கடன் பெறவும், புதிய தொழில் முனைவோருக்கு உறுதுணையாக இருக்கிறது.

இது குறித்து மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் ஜானி டாம் வர்க்கீஸ் கூறுகையில், "மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் PMEGP திட்டத்தின் கீழ் 34 நபர்களுக்கு வங்கிக் கடன் மானியமாக ரூபாய் 25,000/- வீதமும், UYEGP திட்டத்தின் கீழ் 61 நபர்களுக்கும். சுயதொழில் ஒதுக்கீடு மூலம், 1566 பயனாளிகளுக்கும், ஆவின் பார்லர் அமைக்க 137 பயனாளிகளுக்கும் மானியம் அளிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம், 1798 பயனாளிகளுக்கு 2021-22 ஆம் நிதியாண்டில் ரூபாய் 3.19 கோடி மானியமாக தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் NHFDC திட்டத்தின் கீழ் 5613 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூபாய் 26.21 கோடி கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினை மாற்றுத் திறனாளிகள் முழுமையாகப் பயன்படுத்தி வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட உதவிடும் வகையில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்துடன் இணைந்து முதற்கட்டமாக 79 நபர்களுக்கு மூன்று அணிகளாக, 4.4.2022 முதல் 6.4.2022, 11.4.2002 முதல் 13.4.2022 மற்றும் 18.4.2002 முதல் 20.4.2022, ஆகிய நாட்களில் திட்ட பொருளாதார திறன், திட்ட அறிக்கை தயாரித்தல், திட்ட மதிப்பீடு செய்தல், வங்கிக் கடன் பெறுதல் போன்ற இனங்களில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனப் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து, அதன் மூலம் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர்.

இப்பயிற்சி முகாமினை 4.4.2022 அன்று காலை 10:30 மணியளவில் சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் அரசுச் செயலாளர் ஆர்.லால்வினா. துவக்கி வைப்பார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x