Published : 24 Apr 2016 10:45 AM
Last Updated : 24 Apr 2016 10:45 AM

ஆட்சி மாற்றத்தை தாருங்கள்; ஏமாற்றத்தை தந்துவிடாதீர்கள்: பிரச்சாரத்தை தொடங்கி கருணாநிதி உருக்கம்

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வரும் மகாராணி ராஜ்ஜியத்துக்கு முடிவுகட்டும் வகையில் ஆட்சி மாற்றத்தை தாருங்கள்; ஏமாற்றத்தை தந்துவிடாதீர்கள் என தமிழக மக்க ளுக்கு திமுக தலைவர் கருணாநிதி உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.

திமுக தலைவர் கருணாநிதி, சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தனது முதல்கட்ட பிரச்சாரத்தை சென்னை சைதாப்பேட்டையில் நேற்று தொடங் கினார். சைதாப்பேட்டை ஐந்து விளக்கு பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசியதாவது:

தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் இந்த நேரத்தில் மக்களின் விடியல் முகங்களை பார்க்கும்போது பெரும் உற்சாகத்தையும், நம்பிக்கையையும் தருகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு செய்த தவறுக்கு பரிகாரமாக இந்த முறை திமுகவை வெற்றி பெறச் செய்வீர்கள் என நம்புகிறேன்.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்ற ஆட்சியைப் பற்றி வாக் களிக்கும் முன்பு நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். மக்களைச் சுரண்டி, அவர்களைப் பற்றி துளியும் கவலைப்படாமல் ஆணவத்தோடு ஆட்சி யாளர்கள் செயல்பட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. செம் பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஒரே நேரத்தில் அதிக அளவு நீர் திறக் கப்பட்டதால் மட்டும் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்தனர். ஆற்று நீரில் பிணங்கள் மிதந்து வந்த காட்சிகள் நெஞ்சை பதறச் செய்தது.

பெருமழை வெள்ளத்தால் லட்சக் கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற நேர்ந்தது. குடிநீர், உணவு, உடைகள் இன்றி மக்கள் தவித்தனர். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க முதல்வர் வரவில்லை. வெள் ளத்தில் சிக்கிய மக்களை எப்படி காப்பாற்றப் போகிறோம் என திமுக உள்ளிட்ட கட்சிகள் பதறி தவித்தபோது, ஆட்சியாளர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மகிழ்ச்சியாக இருந் தனர்.

ஆனால், கடந்த திமுக ஆட்சியின் போது வெள்ளம் வந்தபோது முதல்வராக இருந்த நானும், அமைச்சர்களும் மக்களை நேரில் சந்தித்து எப்படி பணியாற்றினோம் என்பதை இப்போது நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

மக்களை காப்பாற்றிய திமுக

சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் திமுக மற்றும் பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு மக்களை காப்பாற்றினர். இப்படி மற்றவர்கள் காப்பாற்றும் அளவுக்குதான் அரசு இயந்திரம் செயல்பட்டது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஒரே நேரத்தில் திடீரென அதிக அளவு நீர் வெளியேற்றப்பட்டது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என திமுக மட்டுமல்ல, அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. ஆனால், இதுகுறித்து சிறு விசாரணை நடத்தக்கூட அதிமுக அரசு முன்வரவில்லை.

மக்களைப் பற்றி கவலைப்படாமல் ஒரு குடும்பத்தில் உள்ள சிலருக்காக ஆட்சி நடத்தி வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக நடந்து நடந்துவரும் மகாராணி ராஜ்ஜியத்துக்கு தமிழக மக்கள் முடிவுகட்ட வேண்டும். இந்த அவல ஆட்சிக்கு முடிவு கட்ட எங்களுக்கு சக்தி கொடுங்கள். திமுகவை ஆட்சியில் அமர்த்தினால்தான் தமிழகத்தில் ஒரு நல்லாட்சியை கொடுக்க முடியும். மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த முடியும்.

அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தைத் தாருங்கள். ஏமாற் றத்தை தந்துவிடாதீர்கள். உங்கள் தொகுதியில் திமுக போட்டி யிட்டா லும், கூட்டணி கட்சிகள் நின்றாலும் ஒற்றுமையுடன், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அன்புடன் பழகி திமுகவினர் தேர்தல் பணியாற்ற வேண்டும். மக்களின் அன்பைப் பெற வேண்டும். சைதாப்பேட்டையில் திரண்ட இந்த பெரும் மக்கள் கூட்டமும், அவர்கள் அளித்த வரவேற்பும் என்னை பெரு மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இதை வாக்குகளாக தரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

ஸ்டாலினுக்கு பாராட்டு தயாநிதிக்கு மட்டும் நாற்காலி

மாலை 4 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கடும் வெயில் காரணமாக மாலை 5.10 மணிக்கே கருணாநிதி மேடைக்கு வந்தார்.

அண்ணா சாலையில் இருந்து சைதாப்பேட்டை ஐந்து விளக்கு பகுதி வரை சாலையில் இருபுறங்களிலும் திரண்டிருந்த திமுகவினர் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

சைதைப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளரும், சென்னை தெற்கு மாவட்டச் செயலாளருமான மா.சுப்பிரமணியன் சுமார் 2 மணி நேரம் கூட்டத்தை ஒழுங்குப்படுத்திக்கொண்டு இருந்தார். பொதுக்கூட்ட மேடை யில் சுமார் 15 நாற்காலிகள் போடப் பட்டிருந்தபோதிலும், கருணாநிதியுடன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மட்டுமே அமர்ந்திருந்தார்.

கனிமொழி, எ.வ.வேலு, வேட்பாளர்கள் மா.சுப்பிரமணியன் (சைதாப்பேட்டை), தா.மோ.அன்பரசன் (ஆலந்தூர்), வாகை சந்திரசேகர் (வேளச்சேரி), க. தனசேகரன் (விருகம்பாக்கம்), தாயகம் கவி (திருவிக நகர்), கராத்தே தியாகராஜன் (மயிலாப்பூர்), எஸ்.அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூர்) உள்ளிட்டோர் மேடையில் நின்று கொண்டிருந்தனர். கடும் வெயில் காரணமாக பல்லாயிரக்கணக்கான தண்ணீர் பாக்கெட்களும், பாட்டில் களும் விநியோக்கப்பட்டன. பொதுக்கூட்டத்தில் எந்தெந்த வேட்பாளர்கள் வந்துள்ளனர் என்பதை மட்டும் மா.சுப்பிரமணியன் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து கருணாநிதி பேசினார். மற்றவர்கள் யாரும் பேச அனுமதிக்கப்படவில்லை. சுமார் 25 நிமிடங்களில் பொதுக்கூட்டம் நிறைவு பெற்றது.

கருணாநிதி பேசும்போது, ‘‘எனது மகன் பொருளாளர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் காலடி படாத இடமே தமிழகத்தில் இல்லை. அவரது பிரச்சாரத்துக்கும், உழைப்புக்கும் கண்டிப்பாக பலன் கிடைக்கும். ஆட்சி மாற்றம் ஏற்படும்’’ என பாராட்டு தெரிவித்தார்.

பின்னர் கருணாநிதிக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள நவீன வசதிகளுடன் கூடிய பிரச்சார வாகனத்தில் அவர் மரக்காணம் புறப்பட்டுச் சென்றார். அவருடன் மருத்துவ வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனமும் சென்றது. கருணாநிதி பேசும்போது தொலைக்காட்சி சேனல்களின் கேமராக்கள் மறைப்பதாக கோஷமிட்ட திமுக தொண்டர்கள் தண்ணீர் பாட்டில்களையும், பாக்கெட்களையும் வீசி எறிந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொண்டர்களை திமுக நிர்வாகிகள் அமைதிப்படுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x