Published : 29 Apr 2016 09:09 AM
Last Updated : 29 Apr 2016 09:09 AM

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து மதுவிலக்கு: மது அருந்துபவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் - கருணாநிதி உறுதி

விழுப்புரம் மாவட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர் களை ஆதரித்து நேற்று மாலை விழுப்புரம் நகராட்சி மைதானத் தில் திமுக தலைவர் கருணாநிதி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: திமுக சமுதாய பேரியக்கம். ‘திமுகவை அப்படி செய்து விடலாம்; இப்படி செய்துவிடலாம்' என்று தற்போதைய முதல்வர் நினைக்கலாம். யாராலும் திமுகவை வீழ்த்த முடியாது.

திமுக நினைத்ததை சாதிக்கும். 93 வயதல்ல, 100 வயதானாலும் உங்களுக்காக பாடுபடுவேன். சேவை செய்வேன். அயராது பாடுபடுவேன். இன்று நாட்டை யார் ஆள்கிறார்கள்? நாட்டைப்பற்றி சிந்திக்காமல், தங்களைப்பற்றி எண்ணுபவர்கள் நாட்டில் நிறைய பேர் உள்ளனர்.

ஜெயலலிதா செய்த காரியம் என்ன? முதல்வர் செய்ய வேண்டிய பணியை செய்தாரா? சென்னை வெள்ளத்தின்போது கூட வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. யாருக்கும் ஆறுதல் கூட செல்லவில்லை. நாங்கள்தான் அலைந்தோம் திரிந் தோம். ஏழை மக்களை காப்பாற்ற புறப்பட்டோம். ஜெயலலிதா வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.

‘93 வயதில் அலையலாமா?' என்று கேட்டார்கள். 93 அல்ல 103 ஆனாலும் மக்களுக்காக பாடுபடுவேன். என்னை நம்பி உள்ளவர்களை காப்பாற்றும் பொறுப்பு எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் உள்ளது. எனக்கு நான் முக்கியமல்ல. நீங்கள்தான் முக்கியம்.

குறிப்பாக இளைஞர்களை நம்பியுள்ளேன். இளைஞர்கள் இந்நாட்டின் முதுகெலும்புகள். இவர்களால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை. இளைஞர்கள் எழவேண்டும், எழுச்சிபெற வேண் டும். அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் சுற்றி சுற்றி வருகிறேன். தமிழ் நாட்டை காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள மாட்டார்களா..? ஏழை எளியோர், தாய்மார்கள் எல்லோரும் ஒன்று கூடினால் நாட்டை காப்பாற்ற முடியும்.

தேர்தல் அறிக்கையில் பல செய்திகள் சொல்லியுள்ளோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வோம் என கூறியிருக்கிறோம். இத்தேர்தல் அறிக்கை யாரையும் புண்படுத்த கூடியதல்ல. பண்படுத்தகூடியது. விவசாயத்துக்கு தனி பட்ஜெட் அமைக்கப்படும். விவசாயிகளின் வேதனையை திமுக மட்டுமே தீர்க்கும். ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து மதுவிலக்கு அமல்படுத்தும் கையெழுத் தாகும். மது அருந்தும் மக்களும் அவர்களது குடும்பத்தினரும் பல துன்பங்களுக்கு ஆளாகின்றனர். மது கொடுமையை ஒழிக்க திமுக முடிவெடுத்துள்ளது. அதற்கு ஆதரவு வேண்டும். மதுவிலக்கு என்றால், ‘பூரண மதுவிலக்கா?' என்று கேட்கிறார்கள். அவரோ படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவேன் என்கிறார். அது என்ன படிப்படியாக..? மது, சாராயம் யாரும் பயன்படுத்த கூடாது. மது அருந்துபவர்களை சிறையில் அடைப்போம். தக்க தண்டனை கொடுப்போம். மது குடும்பத்தை சீர்குலைக்கும். மதுவை கைவிட்டால்தால்தான் மனிதன் மனிதனாக வாழமுடியும். திமுகவின் தேர்தல் அறிக்கையில் உச்சகட்டம் மதுவிலக்கை அமல்படுத்துவதாகும். நான் முதல்வரானால் மதுவிலக்கு திட்டதை கொண்டுவருவதுதான் என் முதல் கையெழுத்தாக இருக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x