மத்திய பல்கலை.களில் பொது நுழைவுத்தேர்வை தடுத்து நிறுத்துங்கள்: டெல்லியில் முதல்வர் ஸ்டாலினிடம் தமிழக மாணவர்கள் கோரிக்கை

மத்திய பல்கலை.களில் பொது நுழைவுத்தேர்வை தடுத்து நிறுத்துங்கள்: டெல்லியில் முதல்வர் ஸ்டாலினிடம் தமிழக மாணவர்கள் கோரிக்கை
Updated on
1 min read

மத்திய பல்கலைக்கழகங்களில், வரும் கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கைக்கு பொதுநுழைவுத்தேர்வு கொண்டு வரப்பட உள்ளது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று டெல்லியில் தமிழக மாணவர்கள், முதல்வர் ஸ்டாலினிடம் நேரில் கோரிக்கை விடுத்தனர்.

டெல்லி பல்கலைக்கழக தமிழ்மாணவர் இயக்க நிர்வாகிகள், டெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்தனர். அப்போது, தமிழகத்தில் இருந்து டெல்லி பல்கலைக்கழகத்துக்கு படிக்க வரும் மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தேவையான விடுதி வசதி செய்து தர ஏற்பாடு செய்ய வேண்டும், கட்டாய இந்தி தேர்வில் இருந்து விலக்கு பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், வரும் கல்வி ஆண்டில் இருந்து மத்திய பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வு கொண்டு வருவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்தனர். கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் முதல்வரிடம் சமர்ப்பித்தனர்.

அம்மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைகள் குறித்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக தமிழ் மாணவர் இயக்க நிர்வாகிகளிடம் உறுதியளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in