

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, அதனை திரும்பப்பெற வேண்டுமென, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: ஆட்சி பொறுப்பேற் றதற்கு பரிசாக பொங்கல் சிறப்புத் தொகையைத் தராமல் திமுக அரசு கைவிரித்தது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சியில் ஆளுங்கட்சிக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு, சிறப்புப் பரிசாக 150 சதவீதம் வரை சொத்து வரி உயர்வை அளித்துள்ளது. இந்த சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர்தான். இனிவரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கின்றன.
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி: வரலாறு காணாத பெட்ரோல், டீசல், சிலிண்டரி விலை உயர்வால்மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சொத்து வரி உயர்வால் அவர்கள் மேலும் பாதிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஒரே கட்டமாக நடைமுறைப்படுத்தாமல், ஆண்டுக்கு 10 சதவீதம் என்ற அடிப்படையில் மறுபரிசீலனை செய்து, புதிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: நகர்ப்புறங்களில் சொத்து வரி உயர்த்தப்படுவது ஏற்புடையதல்ல. இதனால், சொத்து வைத்திருப்பவர்களும், வாடகைக்கு குடியிருப்பவர்களும் பாதிக்கப்படுவார்கள். கரோனாவால் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில்இருப்போருக்கு, வரி உயர்வு கூடுதல் சிரமத்தை ஏற்படும். எனவே, சொத்து வரி உயர்வை திரும்பப் பெற்று, மாற்றுத் திட்டங்களின் மூலமாக வருவாயை பெருக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன்: உள்ளாட்சியிலும் நல்லாட்சி அமைய வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையில் வாக்களித்த மக்களுக்கு வரி உயர்வு, தாங்க முடியாத சுமையாகும். மத்திய அரசின் மீற முடியாத நிபந்தனையை ஏற்று வரி உயர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறுவது வியப்பளிக்கிறது. வரி உயர்வை நிறுத்த மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: சொத்து வரியை உயர்த்தி அநீதியான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு உள்ளாட்சி அமைப்புகளில் மத்திய அரசு உதவிகள் பெற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரியை உயர்த்த வேண்டும் என்றும், அதன்படி உயர்த்தியும் அநீதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அதிகார வரம்பு மீறிய செயலைக் கண்டிக்காமல் அதனைச் செயல்படுத்த முன்வந்திருப்பதை ஏற்க இயலாது. கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மீள முடியாமல் தவிக்கும் மக்களுக்கு, இது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுபோல உள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால், மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில், சொத்து வரியைஉயர்த்தியிருப்பது கண்டனத்துக்குரியது. மக்களின் துயரங்களைப் போக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள், போட்டி போட்டுக் கொண்டுவிலைவாசியை உயர்த்தி கொள்ளையடித்து வருகின்றன. விடியலைத் தரப்போவதாகக் கூறிய திமுக, சொத்து வரியை உயர்த்தி மக்களின்வாழ்வாதாரத்தை முடக்கியுள்ளது. கஜானாவை நிரப்ப பொதுமக்கள் வயிற்றில் அடிப்பது நியாயமில்லை.
பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ,மருந்துகள், சுங்கக் கட்டணம் ஆகியவற்றின் உயர்வால் மக்கள் அவதிப்பட்டுவரும் நிலையில், சொத்து வரியும் உயர்த்தப்பட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். இது நியாயமற்றது. மக்கள் மீது தாங்க முடியாத சுமைகளை அரசு சுமத்தக்கூடாது. இது சொத்து வைத்திருப்பவர்களைத் தாண்டி, வாடகை உயர்வு என்ற பெயரில் ஏழை மக்களையும் பாதிக்கும். எனவே, இந்த சொத்துவரி உயர்வை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: சொத்து வரியை 100 சதவீதம் வரை உயர்த்தியுள்ள திமுக அரசுக்கு கடும் கண்டனம். இதுதான் நீங்கள் தமிழக மக்களுக்குத் தரப்போவதாகச் சொன்ன விடியலா? கரோனா பாதிப்புக்கு பின்னர் தற்போதுதான் இயல்புநிலை ஏற்படத் தொடங்கி இருக்கிறது. இந்நிலையில், மக்கள் தலையில் இடி விழுவது போல் அறிவிப்புகளை வெளியிடுவது மனசாட்சி இல்லாத செயல்.