

வீட்டுவசதி வாரிய குடியிருப்பு ஒதுக்கீடு பெற்று முழு தொகையையும் செலுத்தி, விற்பனைப் பத்திரம் பெறாதவர்கள் நாளை முதல் ஏப்.8-ம் தேதி வரை கோட்ட, பிரிவு அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் பெற்றுக் கொள்ளலாம்என்று வீட்டு வசதி வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வாரிய மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் பல்வேறு திட்டங்களில் பொதுமக்களுக்கு மாதத் தவணை திட்டம், மொத்த கொள்முதல் திட்டம் மற்றும் சுயநிதி திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் வீடு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. குடியிருப்புகளுக்குரிய முழுத் தொகையும் செலுத்திய பின், கிரயப் பத்திரம் வழங்கப்படும்.
இந்நிலையி்ல், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியப் பணிகளை அமைச்சர் சு.முத்து சாமி ஆய்வு செய்தபோது, சில ஒதுக்கீடுதாரர்கள் முழுத்தொகையை செலுத்தியிருந்தும், விற்பனைப் பத்திரத்தை பெற முன்வரவில்லை என்பதையும், இதற்கான ஒதுக்கீடுதாரர்களுக்கு பலமுறை கடிதம் அனுப்பப்பட்டும், அவர்களின் முகவரி மாற்றத்தால் கடிதம் திரும்ப வந்துள்ளதையும் கண்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து, முழுத்தொகையை செலுத்தியிருந்தும் விற்பனைப் பத்திரம் பெறாதவர்கள் மற்றும் நிலுவைத் தொகை உள்ளவர்கள், அதனை செலுத்தி விரைவாக விற்பனை பத்திரம் பெறும் வகையில், செய்தித்தாள்களில் அறிவிப்பு வெளியிட அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், நாளை (ஏப்.4) முதல் 8-ம் தேதி வரை வாரியத்தின் அனைத்து கோட்டம், பிரிவு அலுவலகங்களிலும் விற்பனைப்பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில், நிலுவைத்தொகை செலுத்த வேண்டியவர்கள், உடனடியாக தொகையை செலுத்த வேண்டும். முழு தொகையையும் செலுத்திய ஒதுக்கீடுதாரர்கள் அனைத்து மூல ஆவணங்களுடன், செயற்பொறியாளர் அலுவலகத்தில் மேலாளரை (விற்பனை மற்றும் சேவை) அணுகி விற்பனைப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.