

பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் சாதாரண ஏழை குடும்பத்தை சேர்ந்த எம்.கிஷோர்குமார் (8) என்ற சிறுவன், தலசீமியா மேஜர் என்ற ரத்த அணுகுறைபாடு நோயால் அவதியுறுகிறார். அவருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு பணமின்றி அவரது பெற்றோர் தவிக்கிறார்கள்.
சமாதானபுரம் காமராஜ் காலனியை சேர்ந்த பெயின்டர் முத்து (48), தனலட்சுமி தம்பதி யரின் மகன் கிஷோர்குமார். 2 வயது வரை உடல்நலத்துடன் இருந்த கிஷோர்குமாரின் வளர்ச்சி, பின்னர் படிப்படியாக குறைந்தது. ஒருகட்டத்தில் நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.
பதறிப்போன முத்துவும், தன லட்சுமியும் பாளையங் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தங்களது மகனை சேர்த்தனர். அங்குள்ள மருத்துவர்கள் பரிசோதித்ததில் தலசீமியா மேஜர் என்ற ரத்த அணு குறைபாடு நோயால் கிஷோர்குமார் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித் தனர். இந்த நோய்க்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறினர். ஆனால் அதற்கு ரூ.10 லட்சம் வரையில் செலவாகும் என்பதால் ஏழை பெற்றோர் செய்வதறியாது திகைத்தனர்.
குழந்தையைக் காப்பாற்ற தற்காலிக தீர்வாக அவ்வப்போது ரத்த மாற்றும் சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டனர். இதன்மூலம் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறையாமல் பார்த்துக் கொண்டனர். கடந்த 6 ஆண்டுகளாக இவ்வாறு தன் நிலைமைக்கு மீறி செலவழித்து முத்து சிகிச்சை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் ஒரு சிலரின் உதவியுடன் வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரியிலும், சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையிலும் மருத்துவ நிபுணர்களிடம் தனது லட்சுமி தனது பிள்ளையை கொண்டு காண்பித்தார். எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைதான் இதற்கு தீர்வு என்று மருத்துவ நிபுணர்கள் அனைவரும் தெரிவித் தனர்.
மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள கிஷோர்குமாரின் எலும்பு மஜ்ஜை யுடன் அனைத்து நிலையிலும் ஒத்துப்போகும் வகையில் அவரது 12 வயது சகோதரி சக்தி மகேஸ்வரியின் உடலில் எலும்பு மஜ்ஜை இருப்பதை மருத்து வர்கள் கண்டறிந்தனர்.
ஆனால் அந்த அறுவை சிகிச்சைக்கு அதிக செலவாகும் என்பதால் உடனடியாக அறுவை சிகி்சசை செய்ய முடியவில்லை. இந்த சிகிச்சைக்கு அரசு உதவி கிடைக்க வழிசெய்யுமாறு திரு நெல்வேலி மாநகராட்சி மேயர் இ. புவனேஸ்வரியை முத்து குடும்பத்தினர் அணுகினர். மேயரின் முயற்சியால் இந்த அறுவை சிகிச்சைக்கு அரசிடமிருந்து ரூ.9.40 லட்சம் கிடைத்துள்ளது.
ஆனாலும் மருந்துகள், மருத்துவ மனை செலவுகளுக்கு ரூ.4 லட்சம் வரையில் தேவைப்படுகிறது. நல்ல உள்ளம் படைத்தவர்கள் உதவி செய்தால் எனது மகனை காப்பாற்ற முடியும் என்றும் கூறினார். இது தொடர்பாக உதவி செய்வோர் சிறுவனின் தாயார் தனலட்சுமியை 81240 59460 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.