Published : 05 Apr 2016 02:56 PM
Last Updated : 05 Apr 2016 02:56 PM

சிவகங்கை மாவட்டத்தில் தொகுதியில் இல்லாதவர்களுக்கு அதிமுகவில் வாய்ப்பு

சிவகங்கை மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்களுக்கு கட்சியினரிடையே ஆதரவும், எதிர்ப்பும் ஏற்பட்டுள்ளது.

காரைக்குடி நகரில் சாலை, குடிநீர், பாதாளச் சாக்கடை ஆகிய அடிப்படை வசதிகள் எதுவும் முழுமை பெறாத நிலையில் நகராட்சி நிர்வாகம் மீது மக்களுக்கு நல்ல பெயர் இல்லை. இந் நிலையில் நகராட்சித் தலைவர் கற்பகம் இளங்கோவை வேட்பாளராக அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

காரைக்குடி தொகுதியில், சோழன் சித.பழனிச்சாமி எம்எல்ஏ, டாக்டர் சுரேந்திரன், முன்னாள் எம்எல்ஏ காளியப்பன் மகன் வீரசேகர் உட்பட பலர் தமக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அதேபோல், திருப்பத்தூர் தொகுதி வேட்பாளர் கரு.அசோகன் தொகுதிக்கே சம்பந்தப்படாதவர் என்று மக்கள் மத்தியில் பரவலான பேச்சு அடிபடுகிறது. அமைச்சர் உதயகுமார், மாவட்டச் செயலாளர் பிஆர்.செந்தில்நாதன் ஆதரவாளர் என்பது மட்டுமே தகுதி என்றும் கட்சியினர் புலம்பத் தொடங்கியுள்ளனர்.

இத்தொகுதியில் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் கரு.சிதம்பரம், முன்னாள் எம்எல்ஏ உமா தேவன், மருதுஅழகுராஜ் உட்பட பலர் தமக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவரை அறிவித்திருப்பது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை நகர் செயலாளர் ஆனந்தன், முன்னாள் எம்எல்ஏ சந்திரன், எம்ஜிஆர் மன்றம் மந்தைக்காளை, மாவட்ட மாணவர் அணி செயலாளர் ராஜா, முன்னாள் எம்எல்ஏ முருகானந்தம், அவரது மகன் சுந்தரபாண்டியன், மாவட்ட ஊராட்சித் தலைவர் சிவதேவ்குமார் ஆகியோர் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பனின் ஆதரவாளரும், கட்சிக் கூட்டம், போராட்டங்களில் அதிகம் தலைகாட்டாத பாஸ்கரன் அம்பலத்தை அறிவித்ததில் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.

அதிமுகவில் மானம் காத்த மானாமதுரை தொகுதி என அடைமொழியோடு அழைக்கும் வழக்கம் உண்டு. அந்த வகையில் அதிமுகவுக்கு செல்வாக்கு மிக்க மானாமதுரை தொகுதியில், அறிமுகம் இல்லாத வேட்பாளர் மாரியப்பன் கென்னடியை அறிவித்ததில் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர். எம்எல்ஏ சீட் பெறுவதற்காகவே தொகுதிக்குள் வலம் வந்தவர் எனப் பரவலாகப் புகார் எழுந்துள்ளது.

இவரது மனைவி சென்னையில் டிஎஸ்பியாக உள்ளதால் மேலிடத் தொடர்பை பயன்படுத்தி வாய்ப்பு பெற்றதாகவும் பகீர் புகார்கள் எழுகின்றன. இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்த எம்.குணசேகரன், கட்சியினரிடமும், தொகுதி மக்களிடமும் நெருக்கம் காட்டாமல் இருந்தது, அவர் மீதான அதிருப்தி இவருக்கு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் எம்.குணசேகரன் எம்எல்ஏ, ஒன்றியக் குழுத் தலைவர்கள் மாரிமுத்து, பாக்கியலட்சுமி, வழக்கறிஞர் அழகுமலை, ஊராட்சித் தலைவர் மனோன்மணி மதிவாணன் ஆகியோர் எதிர்பார்த்திருந்தனர். அவர்களுக்கு கிடைக்காததால் ஏமாற்றத்தில் உள்ளனர்.

பொதுவாக, கட்சி அறிவித்தபோதெல்லாம் போராட்டம், ஆர்ப்பாட்டம் எனக் கலந்து கொண்டவர்களுக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை எனவும், குற்றச்சாட்டுகளுக்கும், கட்சி தொண்டர்களிடம் நெருக்கம் காட்டாதவர்களுக்கே வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பரவலான குற்றச்சாட்டு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x