

வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் கஞ்சா விற்றதாக 26 பேர் கைது செய்யப்பட்டு 52 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள் ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூர் மாவட்டத்தில் சட்டத் துக்கு புறம்பாக சாராயம், மதுவிலக்கு வழக்குகள், கஞ்சா, தடை செய்யப்பட்ட குட்கா, லாட்டரி விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்பேரில் கடந்த 3 மாதங்களில் மதுவிலக்கு தொடர்பாக 1,048 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 951 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 9 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 9,374 லிட்டர் சாராயமும் 145 கிலோ வெல்லம், 43 ஆயிரத்து 300 லிட்டர் சாராய ஊறல்கள் கண்டறிந்து அழிக்கப்பட்டன.
அதேபோல், மணல் கடத்தல் தொடர்பாக கடந்த 3 மாதங்களில் மட்டும் மொத்தம் 106 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 136 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 118 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாவட்டத்தில் கஞ்சா வழக்குகள் தொடர்பாக 24 வழக்குகளில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர் களிடம் இருந்து 52 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தடை செய்யப்பட்ட குட்கா வழக்கில் 160 வழக்குகளில் 160 பேர் கைது செய்யப்பட்டு 1,229 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.8.93 லட்சம் ஆகும்.
தடை செய்யப்பட்ட லாட்டரி தொடர்பாக மாவட்டத்தில் இதுவரை 16 வழக்குகளில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் சட்ட விரோதமாக குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்துள்ளனர்.