Published : 02 Apr 2022 01:12 PM
Last Updated : 02 Apr 2022 01:12 PM

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் சொத்து வரி குறைவு: அமைச்சர் கே.என்.நேரு

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு | கோப்புப் படம்

புதுடெல்லி: மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் சொத்து வரி உயர்வு மிகமிகக் குறைவாகவே இருக்கிறது என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

தமிழகத்தில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (ஏப்.2) செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், " இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில், தமிழகத்தை விட 50 சதவீதம், 100 சதவீதத்துக்கும் மேலாக வரி வசூலிக்கப்படுகிறது. தமிழக முதல்வர் ஏழை எளிய மக்கள் அதிகம் பாதிக்கப்படாத அளவிற்கு, இந்த வரி உயர்வை ஏற்படுத்திக் கொடுத்தார். அதுவும் தற்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற, நகராட்சித் தலைவர்கள், நகராட்சி பணத்திலேயே நகரங்களை முன்னேற்றுவதற்காக இதன்மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே இதனை பலர் அதிகமாக விமர்சிக்கின்றனர். குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர், திமுகவுக்கு வாக்களித்தவர்களுக்கான பரிசு என்று கூறுகிறார்.

இந்த வரி உயர்வை 2018-ம் ஆண்டு, அதிமுக ஆட்சியில் 200 சதவீதம் உயர்த்தியிருந்தார்கள். தேர்தல் வருகிறது என்ற காரணத்தால், முழுமையாக அதை நிறுத்திவைத்தவர்கள்தான் அவர்கள். அதிமுக ஆட்சியின்போது ஏழை, பணக்காரர்கள் என்று இல்லாமல், ஒரே வகையில் வரி உயர்வு செய்யப்பட்டது. ஆனால் தமிழக முதல்வர் ஏழைகளுக்கு குறைவாகவும், கொஞ்சம் வசதி படைத்தவர்களுக்கு 1800 சதுர அடிக்கு மேல் உள்ள கட்டிடங்களுக்கு கூடுதலாகவும் வரியை உயர்த்தி இருக்கிறார்.

சென்னையில் உள்ள 54 லட்சம் பேரில் முக்கால்வாசி பேர் 600 சதுர அடிக்கு குறைவான இடத்தில் வசிக்கின்றனர். அவர்களுக்கு இதுவரை 100 ரூபாய் வரி என்றால், தற்போது ரூ.125 என்கிற அளவில் வரி உயர்த்தப்பட்டுள்ளது. 1800 சதுர அடிக்கு மேல் இருப்பவர்களுக்கு 50 சதவீத உயர்வும், அதே 1800 சதுர அடிக்கு மேல் முக்கிய வீதிகளில் வசிப்பவர்களுக்கு 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஸ்லாப் சிஸ்டத்தின் அடிப்படையில்தான் இந்த வரி உயர்த்தப்பட்டிருக்கு. எனவே மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் வரி உயர்வு மிகமிகக் குறைவாகவே இருக்கிறது" என்று அவர் விளக்கிக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x