Published : 11 Apr 2016 07:38 AM
Last Updated : 11 Apr 2016 07:38 AM

தேமுதிகவை உடைக்கும் சதிக்கு துணைபோகக் கூடாது: செயற்குழு கூட்டத்தில் விஜயகாந்த் உருக்கம்

தேமுதிகவை உடைப்பதற்காக நடக்கும் சதிக்கு ஆளாகிவிடக்கூடாது என்று தேமுதிக செயற்குழு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் உருக்கமாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேமுதிகவில் இருந்து 3 எம்எல்ஏக்கள், சில மாவட்டச் செயலாளர்கள் வெளியேறியுள்ள சூழலில், அக்கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் விஜயகாந்த் தலைமையில் சென்னை கோயம்பேட்டில் நேற்று நடந்தது. காலை 10 மணியளவில் தொடங்கி சுமார் இரண்டரை மணி நேரம் கூட்டம் நடந்தது.

செயற்குழு கூட்டத்தில் திமுக, அதிமுகவுக்கு எதிராக ம.ந.கூட்டணி, தமாகா அணியில் தேமுதிகவை இணைத்ததற்கு விஜயகாந்துக்கு பாராட்டு தெரிவித்தும், சந்திரகுமார் உள்ளிட்டவர்களை கட்சியில் இருந்து நீக்கியதை வரவேற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பணத்தால் வெற்றி பெற நினைக்கும் திமுக, அதிமுகவின் முயற்சிகளை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை மத்திய அரசு உடனடியாக தடுக்க வேண்டும். தேமுதிக - ம.ந.கூட்டணி - தமாகா வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய தேமுதிக தொண்டர்கள் உழைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

செயற்குழுவில் விஜயகாந்த் பேசியது குறித்து, அக்கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்ததாவது:

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு செயற்குழுவில் விஜயகாந்த் உற்சாகமாக பேசினார். ‘தேமுதிகவை உடைப்பதற்காக சிலர் சதி திட்டம் தீட்டியுள்ளனர். அதில் நமது நிர்வாகிகள் சிலர் சிக்கியுள்ளனர். மீதமுள்ள சிலரையும் இழுப்பதற்கு முயற்சிகள் நடக்கின்றன என்பதை அறிவேன். நீங்கள் மாற்றுக் கட்சிகளுக்கு செல்வதைப் பற்றி ஒன்றுமில்லை. ஆனால், நம்மிடம் இருந்து மாற்றுக் கட்சிகளுக்கு சென்றவர்களின் நிலை என்ன என்பதை யோசித்துப் பாருங்கள். மாற்று என்று கூறித்தான் தேமுதிகவை தொடங்கினோம். அப்படி இருக்கையில் திமுக, அதிமுகவுடன் மாறி மாறி கூட்டணி அமைத்தால், நமது கட்சி இன்னும் 2 தேர்தலில் காணாமல் போய்விடும். அதற்கான வேலைகளை திமுக, அதிமுகவே பார்த்துவிடும். எந்த நம்பிக்கையில் என்னை நம்பி வந்தீர்களோ, அதே நம்பிக்கையில் என்னோடு இருங்கள். உங்களுக்கு தேவையானதை நிச்சயம் செய்வேன்’ என்று உருக்கமாக பேசினார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x