Published : 21 Apr 2016 08:54 AM
Last Updated : 21 Apr 2016 08:54 AM

பச்சை தலைப்பாகையை இனிமேல் கழற்றப் போவதில்லை: தூத்துக்குடியில் வைகோ அறிவிப்பு

‘பச்சை தலைப்பாகையை தேர்தலுக்காக அணியவில்லை. விவசாயிகளின் மேம்பாட்டுக்காக அணிந்துள்ளேன். இனிமேல் இதனை கழற்றப் போவதில்லை’ என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் போட்டியிடும் தேமுதிக- மக்கள் நலக்கூட்டணி- தமாகா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று மாலை 5 மணியளவில் விளாத்திகுளம் புதூரில் பிரச்சாரத்தை வைகோ தொடங்கினார். அவர் பேசியதாவது:

தமிழகத்தில் ஒன்றரை கோடி இளம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களால் தான் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியும். மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என, அதிமுகவும், திமுகவும் தற்போது கூறி வருகின்றன. இது மக்களை ஏமாற்றும் வேலை. எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்கு முழுமையாக அமல்படுத்தப்படும்.

அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்படும். முதல்வர் முதல் அனைவரும் அரசு மருத்துவமனைகளில் தான் சிகிச்சை பெறுவார்கள். நான் இப்போதே அதனை தொடங்கிவிட்டேன். இனிமேல் எந்தவித சிகிச்சை என்றாலும் அரசு மருத்துவமனைக்கு தான் செல்வது என முடிவு செய்துள்ளேன்.

எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வரும்போது அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் வாங்கிய கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். நான் இந்த பச்சை தலைப்பாகையை தேர்தலுக்காக அணியவில்லை. விவசாயிகளின் மேம் பாட்டுக்காக, அவர்களோடு எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காக அணிந்துள்ளேன். இனிமேல் இதனை கழற்றப் போவதில்லை என்றார் வைகோ.

புதூரில் வைகோ பேசிக் கொண்டிருந்த போது, சிலர் போதையில் ஆடிக் கொண்டிருந்தனர். அவர்களை உடனே வெளியேற்றுங்கள் என போலீஸாரை கேட்டுக்கொண்டார். `இதில் அவர்கள் செய்த தவறு ஏதும் இல்லை. எல்லாவற்றுக்கும் அதிமுகவும், திமுகவும் தான் காரணம்’ என்றார் வைகோ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x