Published : 07 Apr 2016 10:17 AM
Last Updated : 07 Apr 2016 10:17 AM

கருணாநிதி குறித்த வைகோ விமர்சனம்: ம.ந. கூட்டணி தலைவர்கள் அதிருப்தி

சாதி ரீதியாக குலத்தொழில் குறித்து வைகோ பேசியதற்கு மக்கள் நலக் கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் தலைவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாயகத்தில் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது தேமுதிகவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள சந்திரகுமார் குறித்து அவர் விமர்சனங்களை முன்வைத்தார். திமுகதான் சந்திரகுமாரின் செயல்பாட்டுக்கு பின்னணியில் உள்ளது என்று குற்றஞ்சாட்டினார்.

ஒரு கட்டத்தில் சாதி ரீதியாக கருணாநிதியையும், சந்திரகுமாரையும் தாக்கி பேசினார். வேறு கட்சி நிர்வாகிகளை திமுக இழுப்பதற்கும், கட்சிக்கு துரோகம் செய்வதற்கும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசிய வைகோ, “இதை செய்வதற்கு வேறு ஏதாவது தொழில் செய்யலாம். வேறு தொழில் என்றதும் சில தொலைகாட்சிகள் என்னைப் பற்றி தப்பாக செய்தி ஒளிபரப்பு செய்யக்கூடும். நான் சொல்லும் தொழில், ஆதி மனிதன் காலத்திலிருந்தே இருக்கின்ற தொழில். இதற்கு சிலர் சட்ட அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். அந்த தொழிலை கருணாநிதி செய்யலாம். யாரும் தவறாக நினைக்க வேண்டாம். கருணாநிதிக்கு நாதஸ்வரம் வாசிக்கத் தெரியும். அதைத்தான் சொன்னேன்’ என்று பேசினார்.

கருணாநிதியின் சாதியை குறிவைத்து வைகோ இப்படி பேசியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த சூழலில், மக்கள் நலக் கூட்டணிக்குள் உள்ள கட்சிகளே வைகோவின் இந்தப் பேச்சால் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், ‘தேமுதிக கட்சியை உடைப்பதற்கு திமுகவின் துண்டுதலின்பேரில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை வைகோ விமர்சித்தார். அச்சமயம் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் தேமுதிக எம்எல்ஏக்கள் தொடர்பாக அரசியலுக்கு அப்பாற்பட்டும், சாதீய தொழில் குறித்தும் தெரிவித்த கருத்துக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்புடையதல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் மார்க்சிஸ்ட் கட்சி எம்பி டி.கே.ரங்கராஜன் கூறும்போது, “வைகோ சொன்னது அரசியலுக்கு அப்பாற்பட்ட கருத்துக்கள்” என்று கூறியுள்ளார்.

விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார், “சாதி ரீதியான குறி வைத்து பேசுவது ஏற்புடையதல்ல’என்று கூறியுள்ளார். அக்கட்சியின் ஊடக தொடர்பாளர் வன்னி அரசு கூறுகையில், “குறிப்பிட்ட சாதியின் தொழிலை குறிவைத்து பேசுவது ஏற்புடையதல்ல. தலித்துகளை பறையடிக்கத்தான் வேண்டும் என்று சொன்னால் அதை ஏற்க முடியுமா. இது போன்ற கருத்துக்கள் சமூகத்தில் இல்லாத நிலை வேண்டும். இதை வைத்துக் கொண்டு மக்கள் நலக் கூட்டணியில் பிளவு ஏற்படும் என்று யாரும் கருத வேண்டாம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x