Published : 02 Apr 2022 08:29 AM
Last Updated : 02 Apr 2022 08:29 AM

இன்று யுகாதி: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

சென்னை: யுகாதி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தெலுங்கு, கன்னட மொழி பேசும்மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி,முதல்வர் ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

ஆளுநர் ஆர்.என்.ரவி: யுகாதி,குடி பத்வா, செட்டி சந்த் போன்றபண்டிகைகள் வரக்கூடிய இந்தமங்களகரமான தருணத்தில், தெலுங்கு, கன்னடம், மராத்தி, சிந்தி மொழி பேசும் என் சகோதர, சகோதரிகளுக்கு நல்வாழ்த்துகள். இந்த மகிழ்ச்சியான தருணத்தில், அன்பையும், நல்லிணக்கத்தையும் பரப்பி, இந்தியாவை வளமான நாடாக மாற்ற உறுதியுடன் ஒன்றுபடுவோம்.

முதல்வர் ஸ்டாலின்: அறுசுவைபச்சடி, மாவிலைத் தோரணம், புத்தாடையுடன் யுகாதி புத்தாண்டுதிருநாளை இன்று சிறப்புடன் கொண்டாடும் தெலுங்கு, கன்னடமொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள். வரலாற்றுரீதியாகவே விந்திய மலைத் தொடருக்கு தெற்கே வாழும் திராவிட மக்கள் தமக்குள் ஏராளமான பண்பாட்டுக் கூறுகளில் ஒற்றுமைகளைக் கொண்டுள்ளனர். இத்தொடர்ச்சி என்றும் நீடிக்க வேண்டும். வேற்றுமைகள் கடந்து, நம்மிடையேயான உறவைப் போற்றும் திருநாளாக யுகாதி திருநாள் அமைய தெலுங்கு,கன்னட மொழி உடன்பிறப்புகளுக்கு நல்வாழ்த்துகள்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: தெலுங்கைதாய் மொழியாக கொண்ட சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி நல்வாழ்த்துகள். அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் என்றென்றும் நிலைத்திருக்க எனது யுகாதி நல்வாழ்த்துகள்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி: உலகெங்கும் வாழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எங்கள் இதயமார்ந்த யுகாதி திருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக மக்களோடு இணைந்து சகோதர, சகோதரிகளாய், தூய சொந்தங்களாய் வாழ்ந்து வரும் மக்கள் அனைவரும் இந்தப் புத்தாண்டில் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளில் எல்லாம் வெற்றியே பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ மனதார வாழ்த்துகிறோம்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: யுகாதி திருநாளில், சாதி, மத துவேஷம் கலைந்து, மக்கள் நலன் சார்ந்தநல்லாட்சி தமிழகத்தில் அமைந்திருக்கிறது. யுகாதி பண்டிகை கொண்டாடும் மொழி சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பும் முக்கியத்துவமும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளில் வாழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் அனைத்து மக்களுக்கும் யுகாதி நல்வாழ்த்துகள்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழர்களுக்கும், தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கும் இடையிலான ஒற்றுமையும், சகோதரத்துவமும் ஆல்போல் தழைத்தோங்க வேண்டும். தெலுங்கு, கன்னட மொழி பேசும் சகோதரர்களுக்கு எனது யுகாதி திருநாள் வாழ்த்துகள்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: யுகாதி கொண்டாடும் தெலுங்கு, கன்னட மொழி பேசும்மக்கள் அனைவரும் நல்ல உடல்நலத்துடன் மகிழ்வுடன் வாழ இறைவன் துணைநிற்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: தமிழகத்தில் கல்வி, கலை, தொழில், வணிகம்போன்றவற்றில் பெரும் பங்களிப்பை செலுத்தி வரும் தெலுங்கு,கன்னட சகோதர, சகோதரிகளுக்கு யுகாதி புத்தாண்டில் புதுப்புது வெற்றிகள் குவிய வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, திருச்சி காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர் உள்ளிட்டோரும் யுகாதி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x