

கோவை மாநகராட்சியில் கடந்த நிதியாண்டில் ரூ.348 கோடியே 23 லட்சம் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் ரூ.45 கோடி அதிக தொகையாகும்.
கோவை மாநகராட்சியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்துவதில் வரி வருவாய் முக்கியப் பங்கு வகிக்கிறது. வரி வசூலை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் வரி வசூலிப்பு பணிகளை அதிகாரிகள் வேகப்படுத்தி மார்ச் இறுதிக்குள் முடிந்த அளவு இலக்கை அடைகின்றனர்.
கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2021-22-ம் நிதியாண்டில், சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை வரி என ரூ.339 கோடியே 60 லட்சம் வரி வசூலிக்க திட்டமிடப்பட்டிருந்தது. அதோடு, நிலுவையில் உள்ள ரூ.395 கோடியே 13 லட்சம் ரூபாயையும் சேர்த்து வசூலிக்க பணிகள் நடைபெற்றன.
இறுதியாக, நடப்பு வரியில் ரூ.253 கோடியே 11 லட்சம் (74.53 சதவீதம்), நிலுவை வரியில் ரூ.95 கோடியே 12 லட்சம் (24.07 சதவீதம்) என மொத்தமாக ரூ.348 கோடியே 23 லட்சம் வரி வசூலிக்கப்பட்டுள்ளது.
சொத்து வரியைப் பொறுத்தவரை, நிதியாண்டில் ரூ.206 கோடியே 33 லட்சமும், நிலுவை தொகை ரூ.158 கோடியே 20 லட்சமும் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட தொடர் நடவடிக்கையால் முறையே ரூ.173 கோடியே 48 லட்சம், ரூ.40 கோடியே 40 லட்சம் என மொத்தமாக ரூ.213 கோடியே 96 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
2020-21-ம் நிதியாண்டில் ரூ.229 கோடியே 50 லட்சமும், நிலுவை தொகை ரூ.73 கோடியே 68 லட்சமும் வசூலிக்கப்பட்டது.
தற்போது அதைக் காட்டிலும் ரூ.45 கோடி கூடுதலாக வரி வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர் விழிப்புணர்வு மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் மூலமாக இந்த அளவு வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.