Published : 02 Apr 2022 07:55 AM
Last Updated : 02 Apr 2022 07:55 AM
சென்னை: நகர்ப்புற மகளிர் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளை உருவாக்கவும், மகளிர் பாதுகாப்பு திட்டமான நிர்பயா திட்டத்தை கண்காணிக்கவும் மாநகராட்சி சார்பில் “பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகம்” ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் சேவையை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தொடங்கிவைத்தார்.
சென்னை மாநகராட்சி சார்பில் பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகம் மற்றும் பயிற்சி கருத்தரங்கம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா பங்கேற்று கருத்தரங்கை தொடங்கிவைத்தார். பின்னர் அவர் கருத்தரங்கில் பேசியதாவது:
உலக அளவில் நகர்ப்புற திட்டமிடல் மற்றும் வடிவமைப்பை முடிவெடுப்பதில் பெண்களின் தேவைகளை கருத்தில் எடுக்கப்பட வேண்டும். நகர்ப்புற திட்டமிடலில் பெண்கள் குறைவாகவே பயன்படுத்தப்படுகிறார்கள். அது மட்டுமல்லாது முடிவெடுப்பதில் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. பெண்களுக்கான சமமான வளர்ச்சியினை ஊக்குவிக்க இந்திய நகரங்களின் திட்டமிடல் மற்றும் இதர பாலினங்களின் தேவைக்கான பொது இடங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்படும் “சென்னை மாநகர கூட்டமைப்பு திட்டம்” மற்றும் “நிர்பயா" திட்டங்களின் கீழ் சென்னை மாநகராட்சியில் தமிழ்நாடு அரசின் மூலம் “பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகம்” (Gender and Policy Lab) உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் முதல் அனுபவம் வாய்ந்த 3 நிபுணர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இதற்கான பணி நடைபெற்று வருகிறது. பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகமானது நிர்பயா திட்டத்தை கண்காணிக்கவும், இதற்கு தேவையான கொள்கைள் மற்றும் அதற்கான விழிப்புணர்வை உருவாக்கவும், பொது இடங்கள் மற்றும் பொது போக்குவரத்தை பெண்களுக்கு பாதுகாப்பானதாக்கவும், ஏற்றதாகவும் மாற்றும் வகையில் செயல்படும். மேலும், அடுத்த 3 ஆண்டுகளில் பல துறைகளில் இதற்கான முயற்சியை செயல்படுத்தும் அமைப்பாகவும் செயல்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, கூடுதல் காவல் ஆணையர் ஜெ.லோகநாதன், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை இயக்குநர் டி. ரத்னா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT