Published : 02 Apr 2022 08:03 AM
Last Updated : 02 Apr 2022 08:03 AM

சென்னையில் ரோந்துப் போலீஸாரை மிரட்டிய விவகாரம்: திமுக கவுன்சிலரின் கணவர் மீது வழக்கு

சென்னை: சென்னையில் ரோந்துப் போலீஸாரை மிரட்டிய விவகாரத்தில், திமுக கவுன்சிலரின் கணவர் மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேர் மீது வண்ணாரப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை ராயபுரம் கிழக்குப் பகுதி, 51-வது வார்டு திமுக கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன். இவர், கடந்த 29-ம் தேதி நள்ளிரவு ராயபுரம் எம்.சி சாலை ஜே.பி. கோயில் சந்திப்பில், தனது ஆதரவாளர்கள் 5 பேருடன் சேர்ந்து, கும்பலாக நின்று பேசிக் கொண்டு இருந்துள்ளார். அவர்கள் மது அருந்தியிருந்ததாகவும், அவர்களது வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அப்போது, அந்த வழியாக வண்ணாரப்பேட்டை காவல் நிலைய காவலர்கள் தியாகராஜன், மணிவண்ணன் ஆகியோர் அங்கு வந்துள்ளனர். அவர்கள் கூட்டமாக நின்றிருந்தவர்களைப் பார்த்து, கலைந்து செல்லுமாறு கூறியுள்ளனர்.

இதனால் கோபமடைந்த அந்த கும்பல் "எங்களை கேட்பதற்கு நீங்கள் யார்?" எனக் கேட்டுள்ளனர். மேலும், "நான் இந்தப் பகுதி கவுன்சிலர். நான் நினைத்தால் உன்னை காலி செய்து விடுவேன்" என்று ஜெகதீசன் மிரட்டியுள்ளார்.

இந்த நிகழ்வை காவலர் தியாகராஜன் தனது செல்போனில் படம் பிடிக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், காவலரின் செல்போனை தட்டிவிட்டதுடன், காவலர்களை மிரட்டி விட்டுச் சென்றுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த காவலர் தியாகராஜன், இதுகுறித்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்படி, ஜெகதீசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 5 பேர் மீது, கும்பலாகக் கூடுதல், அவதூறாகப் பேசுதல், அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

முன்னதாக, ஜெகதீசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், போலீஸாரை மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x