Published : 02 Apr 2022 08:09 AM
Last Updated : 02 Apr 2022 08:09 AM
சென்னை: கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான, ரூ.5 கோடி மதிப்பிலான சொத்து மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் சாலையில், கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான, 4,920 சதுரஅடி பரப்பளவு உள்ள மனை லட்சுமணன் என்பவருக்கு மாத வாடகைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால், அந்த மனையை 4 பேர் ஆக்கிரமித்து, கட்டிடம் கட்டி குடியிருந்தும், கடைகளைக் கட்டி உள்வாடகைக்கு விட்டும் இருந்தனர். நியாய வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு, பலமுறை அறிவிப்புகள் அனுப்பப்பட்டும், நியாய வாடகையை செலுத்தாததால், இணை ஆணையரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதனடிப்படையில், உள் வாடகைதாரர்கள் ஆக்கிரமித்திருந்த 1,874 சதுரஅடி மனை, கடந்த 2018 ஜூலை 30-ம் தேதி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, சுவாதீனம் எடுக்கப்பட்டது.
ஆனால், 1,525 சதுர அடி பரப்பளவுள்ள மனையில் கட்டிடம் கட்டி ஆக்கிரமித்திருந்தவர், நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அவரின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.
அவர் 1,525 சதுரஅடி மனையில், வணிக நோக்கிலான 3 கடைகளைக் கட்டி ஆக்கிரமித்திருந்தார். அந்த 3 கடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டு, கோயில் வசம் சுவாதீனம் எடுக்கப்பட்டது. சுவாதீனம் எடுக்கப்பட்ட சொத்தின் மதிப்பு ரூ.5 கோடியாகும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT