Published : 13 Apr 2016 11:02 AM
Last Updated : 13 Apr 2016 11:02 AM

அனைவரும் வாக்களிப்போம்; நல்லவருக்கு வாக்களிப்போம்!- ‘வாக்காளர் வாய்ஸ்’ நிகழ்ச்சியில் ஒலித்த குரல்

‘தி இந்து’ மற்றும் தேர்தல் ஆணையம் நடத்திய விழா

ஜனநாயகத்தில் இளைஞர்கள் ஆற்ற வேண்டிய கடமைக்காக ‘தி இந்து’ நாளிதழ் மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து, ‘வாக்காளர் வாய்ஸ்’ என்ற மாணவர் திருவிழாவை நடத்தி வருகிறது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம், மதுரை, கோவை, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் பெரும் வரவேற்புடன் நடைபெற்ற இவ்விழா, நேற்று ஈரோடு மாவட்டம் துடுப்பதியில் உள்ள ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் நடந்தது.

ஈரோடு, திருப்பூர் மாவட்டத்துக் கான மத்திய தேர்தல் பார்வை யாளரும், அகில இந்திய வானொலி செய்திப்பிரிவின் இயக்குநருமான ராஜீவ் குமார் ஜெயின், ஈரோடு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான எஸ்.பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதீஷ், ஈரோடு செங்குந்தர் கல்வி அறக்கட்டளை செயலாளர் எஸ்.சிவானந்தன், எழுத்தாளர் ஈரோடு கதிர், ‘தி இந்து’ நடுப்பக்க ஆசிரியர் சமஸ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கிவைத்தனர்.

எஸ்.பிரபாகர் (மாவட்ட ஆட்சியர்):

தேர்தலில் 18 வயது நிறை வடைந்த அனைவரும் அவர் களது முடிவுக்கு ஏற்பவும், நேர்மையாகவும் வாக்களிக்க வேண்டும். இந்தியா தேர்தலை கண்டு உலக நாடுகள் வியக்கின்றன. தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் என்எஸ்எஸ், என்சிசி மாணவர்களின் பங்களிப்பு அவசியமானது. இன்றைய மாண வர்கள் நாளை தேர்தல் நடத்தும் அதிகாரியாகவோ, தேர்தலில் வேட்பாளர்களாக வருவீர்கள். மாணவர் சமுதாயம் மூலமே தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். சிறந்த குடிமகன்களாக மணவர்களே இருப்பர்.

ரெ.சதீஷ் (மாவட்ட வருவாய் அலுவலர்):

தேரதல் குறித்து மாணவ, மாணவியர் புரிந்து கொள்ள வரலாற்றை திருப்பி பார்த்தால் அதன் முக்கியத்துவம் தெரியும். ரிக் வேத காலத்தில் நமது வரலாறு தொடங்கியது. தமிழகத்தில் சங்க காலத்தில் தொடங்கியது. 1956-ம் ஆண்டு முதல் தேர்தல் நடந்தபோது யாருக்கும் அடையாளம் இல்லை. சாதியின் அடையாளத்தை வைத்து தான் நாம் அடையாளம் காணப் பட்டோம். இந்திய ஜனநாயகம் எந்த நாட்டிலும் கிடையாது. வாழ்வின் பாதுகாப்பு தான் ஜனநாயகத்தின் கொடை.

எஸ்.சிவானந்தன் (செங்குந்தர் கல்வி அறக்கட்டளை செயலாளர்):

தேர்தலில் 80 சதவீதம் படிக்காத வர்கள் தான் ஜனநாயக கடமை யாற்றுகின்றனர். படித்தவர்கள் வரிசையாக நிற்பதை கேவலமாக நினைக்கின்றனர். அசாம் போன்ற கல்வி அறிவு குறைந்த மாநிலத்தில் 85 சதவீதம் வாக்குப்பதிவு நடை பெறுகிறது. கல்வியறிவு பெற்ற கேரள போன்ற மாநிலங்களில் வாக்குப்பதிவு குறைகிறது. கட்டாயம் ஓட்டுபோட வேண்டும் என்பதற்கு கடுமையான சட்டங்கள் வேண்டும். அனைவரும் வாக்களிப் போம்; நல்லவருக்கு வாக்களிப் போம்.

ஈரோடு கதிர் (எழுத்தாளர்):

வாக்களிப்பதை ஒரு கடமையாக பார்க்காமல், என்னை ஆட்சி செய்பவரை நான் தேர்வு செய்யும் தெளிவோடு பார்த்து வாக்களிக்க வேண்டும். படித்தவன் ஓட்டு போடாவிட்டால் அவனும் பாதிக்கப்படுவான்; சமுதாயமும் பாதிக்கப்படும். நம் அளவில் அரசியலை சுத்தம் செய்ய என்ன செய்யப்போகிறோம் என் பதை யோசியுங்கள். ஓட்டு என்பது சமூகத்திற்கு நாம் செலுத்தும் மரியாதையாக நினையுங்கள்.

சமஸ் (தி இந்து நடுப்பக்க ஆசிரியர்):

ஒரு குடிமைச்சமூகம் எவ்வளவு துடிப்பாகவும், பொறுப்பாகவும், அரசியல் உணர்வுடனும் இருக்கிறதோ அந்த அளவுக்கு அங்கு அரசியல்வாதிகளும், ஆக்கப்பூர்வமானவர்களாக இருப்பார்கள். கன்னியாகுமரியில் இருந்து வெறும் இரண்டு மணி நேர பயண தொலைவில் இருக்கிறது திருவனந்தபுரம். கன்னியாகுமாரியில் ஆட்டோக் காரர்கள் மீட்டர் போடுவதில்லை. திருவனந்தபுரத்தில் நாம் அதிகம் கொடுத்தாலும், மீட்டருக்கு மேல் ஆட்டோ ஓட்டுநர்கள் வாங்குவதில்லை. எப்படி நடக்கிறது இந்த மாற்றம். ஒரு மலையாளிக்கு இருக்கும் அரசியல் உணர்வை ஒருபோதும் தமிழர்களுடன் ஒப்பிட முடியாது.

நாட்டில் உள்ள சிறிய மாநிலங்களில் ஒன்றான கேரளத் தில்தான், நாட்டிலேயே அதிகமான பத்திரிகைகள் விற்கின்றன. கேரள அரசியல் ஏன் தமிழக அரசியலைப் போல் இல்லை என்பதற்கான காரணங்களில் ஒன்றை இந்த பத்திரிக்கை வாசிப்பில் இருந்தே புரிந்து கொள்ளலாம்.

சக மனிதன் மீதான சமூகத்தின் மீதான அக்கறைகளில் ஒன்று அன்றாடம் நாளிதழ் வாசிப்பது. வாசிப்பு குறைந்த சமூகம் அரசியல் அவலங்களை எதிர்கொள்வதை தவிர்க்க முடியாது. ஜனநாயகம் அடிப்படையில் ஒவ்வொரு குடிமகனும் தன்னை எவ்வளவு தகுதியோடு வைத்துக் கொள்கிறான் என்பதிலேயே இருக்கிறது, என்றார்

முன்னதாக, தேர்தலில் அனை வரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகை யில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து மாணவர் களின் தப்பாட்டம் மற்றும் தேர்தல் விழிப்புணர்வு பாடல்கள் இசைக்கப் பட்டன. ‘மில்கா வொண்டர் கேக்’ நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கு குடிநீர் பாட்டில் மற்றும் வொண்டர் கேக் வழங்கப்பட்டது. ஈரோடு எல்லப்பாளையம் சூர்யோதயா டெக்ஸ்டைல்ஸ் சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மரக் கன்றுகள் வழங்கப்பட்டன. விழா வில் பங்கேற்ற அனைத்து மாணவர் களுக்கும், ‘தி இந்து’ நாளிதழ் இலவசமாக வழங்கப்பட்டது. வாக்காளர் வாய்ஸ் நிகழ்ச்சியை ‘தி இந்து’வுடன் இணைந்து ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி, மில்கா வொண்டர் கேக் நிறுவனம் மற்றும் கோகினூர் ஹோட்டல்ஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு

கல்லூரி வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் கூடிய மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு முதன்முறையாக வாக்களிக்கவுள்ள வாக்காளர்களுக்கு எப்படி வாக்களிப்பது என செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் இதை பார்வையிட்டு, மாதிரி வாக்குபதிவு செய்தனர். மேலும் 18 வயது நிறைவடைந்தவர்கள் வயதுகுரிய சான்றிதழை அளித்தால், உடனடியாக வாக்காளர் பட்டியலில் பெயரை இணைக்கும் வகையில் நடமாடும் வாக்காளர் பதிவு மையம் கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பல மாணவர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தனர். கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பில், ’கல்வி வணிகமயத்தை ஒழித்து கட்டணமில்லாக் கல்வி வழங்க வேண்டும்’ என்பதை வலியுறுத்தும் புத்தகத்தை மாணவ, மாணவிகளுக்கு கூட்டமைப்பின் தலைவர் சு.மூர்த்தி வழங்கினார்.

பா.சிவச்சந்திரன் - மாணவர்

மற்ற நிகழ்ச்சிகளைப்போல் இந்த நிகழ்ச்சியில் வாக்குக்கு பணம் வாங்க வேண்டாம் என்று சொல்லப் போகிறார்கள் என நினைத்தேன். ஆனால், ‘தி இந்து’ நடுபக்க ஆசிரியர் சமஸ் பேசிய ஒவ்வொரு வார்த்தை களும் சவுக்கடிபோல் இருந்தது. இந்த விஷயம் மூலம் என்னை திருத்திக் கொள்ளும் வாய்ப்பாக இதை நான் பார்க்கிறேன்.

வினோதா - மாணவி

தேர்தல் எவ்வளவு முக்கியம். தேர்தல் மூலம் எப்படி நல்லது செய்ய முடியும் என்பதை இந்நிகழ்ச்சியின் மூலம் தெரிந்து கொண்டேன். ஆள்காட்டி விரலில் மை வைப்பது, நல்ல தலைவர்களை தேர்வு செய்வதற்கு தான்.

வாக்குச் செலுத்துவது எப்படி என்பதை மாணவர்கள் தெரிந்து கொள்வதற்கு வசதியாக அமைக்கப்பட்ட மாதிரி வாக்குச்சாவடி மையம்.

வாக்காளர் விழிப்புணர்வு பாடல் பாடிய மாணவர்கள் திருமூர்த்தி, சிவபாலன்.

தப்பட்டை அடித்து வாக்காளர் விழிப்புணர்வு நடனம் ஆடிய கல்லூரி மாணவர்கள் கார்த்தி, மாரிமுத்து.

படங்கள்: எஸ்.குரு பிரசாத்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x