Published : 02 Apr 2022 06:32 AM
Last Updated : 02 Apr 2022 06:32 AM
கரூர்: க.பரமத்தி அருகே தனியார் சூரிய மின் உற்பத்தி மின் பாதை செல்ல எதிர்ப்பு தெரிவித்த மக்களை நேற்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்.
கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம் நடந்தை ஊராட்சியைச் சேர்ந்த வேட்டையார்பாளையம் கிராமத்தின் வழியாக அருகில் உள்ள கோடங்கிபட்டியில் உள்ள தனியார் சூரிய (சோலார்) மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து ஆண்டிசெட்டிபாளையம் துணைமின் நிலையத்துக்கு மின் கம்பங்கள் நட்டு மின் பாதை அமைத்து மின்சாரம் எடுத்துச் செல்லப்படுகிறது.
இவ்வழியே மின் கம்பிகளில் அதிக மின்னழுத்த மின்சாரம் செல்வதால் மழை, இடி, மின்னல் நேரங்களில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாகவும் வீட்டில் உள்ள டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதனங்கள் பழுதடைந்து விடுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், அங்கு புதிய தனியார் சூரிய மின் உற்பத்தி நிறுவனம் 5 ஏக்கர் அளவில் சோலார் பேனல் அமைத்து வேட்டையார்பாளையம் வழியாக ஆண்டிசெட்டிப்பாளையம் துணை மின் நிலையத்துக்கு மின்பாதை அமைத்து மின்சாரம் எடுத்துச் செல்ல தற்போது சாலையோரங்களில் கம்பம் நடும் பணியை மேற்கொண்டு வருகிறது.
ஏற்கெனவே உள்ள நிறுவனம் சாலையின் ஒருபுறம் மின்பாதை அமைத்து மின்சாரம் கொண்டு செல்லும் நிலையில், தற்போது புதிய நிறுவனம் சாலையின் மற்றொரு புறத்தில் கம்பம் நட்டு மின் பாதை அமைத்து வருகிறது. சாலையின் இருபுறங்களிலும் மின் பாதை வருவதால் வேட்டையார்பாளையம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, வேட்டையார்பாளையம் பொதுமக்கள் இந்த புதிய சோலார் மின் திட்டத்தை கைவிட வேண்டும் அல்லது மாற்று பாதையில் மின்கம்பங்களை நட்டு, மின்சாரத்தை எடுத்துச் செல்லவேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதுதொடர்பாக, பாஜக மாவட்டத் தலைவர் வி.வி.செந்தில்நாதன் இப்பகுதி மக்களை மார்ச் 29-ம் தேதி சந்தித்தார்.
இதையடுத்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று வேட்டையார்பாளையம் வந்து பொதுமக்களை சந்தித்து சூரிய மின் தடம் செல்வதால், கிராமத்தில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து, குடியிருப்புகளுக்கும், பொதுமக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு வரும் மின் பாதை பிரச்சினை குறித்து 2 நாட்களுக்குள் தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
அப்போது பாஜக மாவட்டத் தலைவர் வி.வி.செந்தில்நாதன் உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT