Published : 02 Apr 2022 06:30 AM
Last Updated : 02 Apr 2022 06:30 AM

வாழைத்தார்களுக்கு நல்ல விலையால் விவசாயிகள் மகிழ்ச்சி: கொள்முதல் செய்ய கேரள வியாபாரிகள் வருகை

திருநெல்வேலி அருகே கருங்குளம் பகுதியில் வாழைத்தார்கள் அறுவடை தீவிரமாக நடைபெறுகிறது. படம்: மு. லெட்சுமி அருண்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடுகளால் வாழைத்தார்கள் விலை வீழ்ச்சியை சந்தித்திருந்த நிலையில், தற்போது நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்ததாக, வாழை விவசாயம் பிரதானமாக மேற் கொள்ளப்படுகிறது. குறிப்பாக, ‘நேந்திரன்’ எனப்படும் ஏத்தன் வாழை சாகுபடியில் பெரும்பாலான விவசாயிகள் ஈடுபடுகிறார்கள். மாவட்டத்தில் களக்காடு, திருக்குறுங்குடி, வள்ளியூர், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் பகுதிகளில் இந்தவகை வாழைகள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. இதுபோல், பிறரக வாழைகளும் பல்வேறு இடங்களில் சாகுபடி செய்யப்படுகிறது.

ஆண்டுதோறும் அறுவடை காலத்தில், கேரள வியாபாரிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் முகாமிட்டு ஏத்தன் வாழைத்தார் களை மொத்தமாக கொள்முதல் செய்வது வழக்கம். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக கரோனா காரணமாக வாழை வியாபாரம் அடியோடு பாதிக்கப்பட்டது.

வாழைத்தார் விவசாயிகள் கடுமையான இழப்பை சந்தித்தனர்.

தற்போது, இயல்புநிலை திரும்பி யிருப்பதால் கேரள வியாபாரிகள் திருநெல்வேலி மாவட்டத்துக்கு வந்து வாழைத்தார்களை மொத்தமாக கொள்முதல் செய்து வருகிறார்கள். இதனால், கடந்த 2 ஆண்டுகளாக நீடித்த மந்தநிலை நீங்கியிருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக, திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் பி. பெரும்படையார் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2 மாதமாக வாழைத்தார் அறுவடை நடைபெற்று வருகிறது. கரோனா கட்டுப்பாடுகள் நீக்கப் பட்டுள்ளதால் கேரள வியாபாரிகள் இங்குவந்து கொள்முதல் செய்து வருகிறார்கள். ஏத்தன் வாழைத்தார்களை கிலோ ரூ.45 வரையில் விலைநிர்ணயம் செய்து வாங்குகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளில் கேரள வியாபாரிகள் வராததால் கிலோ ரூ.10 முதல் ரூ.20 என்ற அடிமாட்டு விலைக்குத்தான் வாழைத்தார்களை விற்பனை செய்ய வேண்டிய நிலை இருந்தது. இதனால் ஒவ்வொரு வாழை மரத்துக்கும் ரூ.150 என்ற அளவில் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டிருந்தது. தற்போது, ஓரளவுக்கு நல்ல விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்வதால், விவசாயிகளுக்கு செலவிட்ட தொகையுடன் கூடுதலாகவும் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

‘திருநெல்வேலி மாவட்டத்தில் ஏத்தன் வாழை விவசாயம் பிரதான மாக இருப்பதால் களக்காடு பகுதியில் குளிர்ப்பதனக் கிடங்கு வசதியுடன், ஏலச்சந்தையும், அரசு வாழைத்தார் கொள்முதல் நிலைய த்தையும் அமைக்க வேண்டும்’ என்று நீண்ட காலமாகவே விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். தமிழக சட்டப் பேரவையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையில் இது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால், விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. திருநெல்வேலி மாவட்டத்தில் வாழை விவசாயத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஏத்தன் வாழைத்தார்களைப் போல், ரசகதலி வாழைத்தார்கள் கிலோவுக்கு ரூ.40 வரையில் கொள்முதல் செய்யப்படுகிறது. இதுபோல், மற்ற வாழைத் தார்களும் நல்லவிலைக்கு கொள் முதல் செய்யப்படுவது வாழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x