Published : 02 Apr 2022 06:00 AM
Last Updated : 02 Apr 2022 06:00 AM

ஆற்காடு அருகே நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் அழிப்பு

கலவை அடுத்த பல்லமுள்வாடி கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை அழித்தபோது நெற்பயிர்களை பார்த்து கதறி அழுத பெண்.

ஆற்காடு: ஆற்காடு அருகே நீர்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பு நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை பொதுப்பணித் துறை அதிகாரிகள் அழித்தனர். ஒரு வாரத்தில் அறுவடை செய்ய இருந்த பயிர்களை அழித்ததால் விவசாயி குடும்பத்தினர் கண்ணீர் மல்க கதறி அழுதனர்.

தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிர மிப்பு பகுதிகளை கண்டறிந்து உடனடியாக அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டத்துக்கு உட்பட்ட கலவை அடுத்த பல்லமுள்வாடி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. அக்கிராமத்தைச் சேர்ந்த பாலு என்பவருக்கு சொந்தமான ஓர் ஏக்கர் நிலம், நீர்நிலை கால்வாய் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ளது. இதில், மூன்று மாத பயிரான ஏடிடி குண்டு ரக நெற்பயிர் சாகுபடி செய்துள்ளார்.

இந்நிலையில், பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ‘பொக்லைன்’ இயந்திரம் மூலமாக ஆக்கிரமிப்பு பயிர்களை டிராக்டர் மூலம் அழித்தனர். இன்னும் ஒரு வாரத்தில் கால அவகாசம் வழங்கி இருந்தால் அறுவடைக்குப் பிறகு அந்த இடத்தில் விவசாயம் செய்திருக்க மாட்டோம் என விவசாயி பாலு குடும்பத்தினர் கதறி அழுதனர்.

இது தொடர்பாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறும்போது,‘‘ஆக்கிரமிப்பு தொடர்பாக அவர்களிடம் 6 மாதங்களுக்கு முன்பே தகவல் தெரிவித்துவிட்டோம். உரிய நேரம் வந்ததால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது’’ என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x