"மக்களை படுகுழியில் தள்ளாதீர்கள்" - சுங்க கட்டண உயர்வுக்கு விஜயகாந்த் எதிர்ப்பு

விஜயகாந்த் | கோப்புப் படம்
விஜயகாந்த் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: சுங்க கட்டண உயர்வால், அண்டை மாநிலங்களில் இருந்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை பலமடங்கு அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது என்று தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெட்ரோல், டீசல், சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு சுங்க கட்டணத்தை ரூ.40 முதல் ரூ.240 வரை உயர்த்தி மக்கள் மீது மென்மேலும் சுமையை ஏற்றுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.

சுங்க கட்டண உயர்வால் அண்டை மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இருந்து பூ, பழம், காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் வாகன உரிமையாளர்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகியுள்ளது. இதன் காரணமாக வாடகை வாகனங்களின் கட்டணத்தை உயர்த்தும் நிலைக்கு அதன் உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை பலமடங்கு அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

மேலும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டிய மத்திய அரசே, விலை உயர்வை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறுவது எந்த வகையில் நியாயம். இதற்காகத்தான் மத்திய, மாநில அரசுகளை மக்கள் தேர்ந்தெடுத்தார்களா?. வரி, வரி என்று வலியை சுமத்தும் அரசை மக்கள் விரும்ப மாட்டார்கள். உடனடியாக சுங்க கட்டண உயர்வை திரும்ப பெறுவதுடன் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், காலாவதியான சுங்கச் சாவடிகளில் கட்டண வசூலை நிறுத்த வேண்டும். உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி போல, மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து விலைவாசியை உயர்த்தி ஏழை, எளிய நடுத்தர மக்களை கடும் சிரமத்திற்கு ஆளாக்கி படுகுழியில் தள்ளியுள்ளது" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in