Published : 01 Apr 2022 06:55 AM
Last Updated : 01 Apr 2022 06:55 AM

கரோனா தொற்றால் இறந்தவரின் குடும்பத்தினர் நிவாரணம் பெற 90 நாட்களுக்குள் விண்ணப்பம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரணம் பெற, இனி 90 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணைத் தொகை வழங்குவதற்கு www.tn.gov.in என்ற இணையதளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் மூலம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை 74,097 மனுக்கள் பெறப்பட்டு 55,300 மனுக்களுக்கு ரூ.50 ஆயிரம் வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 13,204 மனுக்கள் இருமுறைபெறப்பட்ட மனு என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டன. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 20-ம் தேதி வழங்கிய தீர்ப்பில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மார்ச் 20-ம் தேதி்க்குமுன் ஏற்பட்ட கரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் 60 நாட்களுக்குள் அதாவது மே 18-ம் தேதிக்குள் மனுக் களை சமர்ப்பிக்க வேண்டும்.

மார்ச் 20 முதல் ஏற்படும் கரோனாஇறப்புகளுக்கு நிவாரணம் கோருவோர், இறப்பு நிகழ்ந்த 90 நாட்களுக்குள் மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நிர்வாகம் 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும்.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள் அதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்யலாம். அவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுவை தகுதியின் அடிப்படையில் மாவட்டவருவாய் அலுவலர் தலைமையிலான குழு பரிசீலித்து தீர்வு செய்யும்.

எனவே, கரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி உரிய காலத்தில் விண்ணப்பித்து நிவாரணம் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x