

சென்னை: தமிழகத்தில் இதுவரை 4.50 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்துவ அடையாள அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இவர்கள் நலத் திட்ட உதவிகளை பெறுவதற்கான கால விரயத்தைக் குறைக்கவும், மாற்றுத் திறனாளிகளின் விவரங்களை சேகரிக்கவும் தேசிய அளவிலான தனித்துவ அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தது.
தமிழகத்தில் தனித்துவ அடையாள அட்டை விநியோகம் செய்யும் பணி தொடக்கத்தில் மந்தகதியில் நடந்து வந்தது.
இதைத் தொடர்ந்து, இப்பணிகளை விரைவுபடுத்தி, கடந்த2 ஆண்டுகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
இப்பணிகளை மேலும் விரைவுபடுத்தும் வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் உதவித் தொகைக்காக விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகளில் தனித்துவஅடையாள அட்டை இல்லாதவர்களைக் கண்டறிந்து தனித்துவ அடையாள அட்டை விநியோகம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணியின் காரணமாக கூடுதலாக 2 லட்சம் தனித்துவ அடையாள அட்டை விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் கணினி இயக்குபவர்களை நியமித்து மருத்துவ சான்றிதழ் வழங்கும் பணி மற்றும் விவரங்களை பதிவேற்றம் செய்யும் பணி விரைவுபடுத்தப்பட்டது.
இதன் காரணமாக, 2 லட்சத்துக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு கடந்த 6 மாதத்தில் தனித்துவ அடையாள அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கெனவே, வழங்கிய அடையாள அட்டைகளையும் சேர்த்து தமிழகம் முழுவதும் இதுவரை 4.50 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை விநியோகம் செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.