Published : 01 Apr 2022 09:27 AM
Last Updated : 01 Apr 2022 09:27 AM

தொழிற்சாலைகளில் அவ்வப்போது தொழிலாளர் உட்கார்ந்து பணியாற்ற நடவடிக்கை: அதிகாரிகளுக்கு தொழிலாளர் நலத் துறை அமைச்சர் அறிவுரை

தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன்தலைமையில் தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் திறனாய்வு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் துறை செயலர் கிர்லோஷ் குமார், தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்குநர் கா.ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை: தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் அவ்வப்போது உட்கார்ந்து பணியாற்ற போதிய வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அறிவுரை வழங்கினார்.

தமிழக தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் திறனாய்வு கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு பயிற்சித் துறை இயக்குநர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

அப்போது அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை அமைச்சர் வழங்கினார். அவர் கூறியதாவது: ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்களின் கீழ் கூறப்பட்ட அனைத்து வசதிகளையும் கிடைக்கச் செய்ய வேண்டும். நீண்ட காலமாக பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் நீண்ட நேரமாக நின்று கொண்டு பணியாற்ற நேரிடுகிறது. அத்தகைய சூழலில் அவர்கள் அவ்வப்போது உட்கார்ந்து பணி செய்ய போதிய வசதிகள் ஏற்படுத்தி தரப்பட வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆய்வுகளின் போது அதிகாரிகள் இதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இத்திறனாய்வு கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலர் கிர்லோஷ் குமார், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் கா.ஜெகதீசன், கூடுதல் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இயக்குநருக்கு நினைவுப் பரிசு

வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையால் மேற்கொள்ளப்படும் பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்களில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் பங்கு மிக சிறப்பாக இருப்பதை பாராட்டி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநருக்கு வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை இயக்குநர் கொ.வீரராகவ ராவ், நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x