Published : 01 Apr 2022 09:18 AM
Last Updated : 01 Apr 2022 09:18 AM
சென்னை: சென்னையில் பயணம் மற்றும் சுற்றுலா கண்காட்சியைத் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று தொடங்கிவைத்தார்.
இந்தியா முழுவதும் உள்ள சுற்றுலா சார்ந்த தொழில் நிறுவனங்கள் ஆண்டுதோறும் சுற்றுலாக் கண்காட்சியை நடத்தி வந்தன. கரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்தக் கண்காட்சி நடத்தப்படவில்லை.
இந்நிலையில், தமிழக சுற்றுலாத் துறை, சுற்றுலா பயண நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் ‘பயணம் மற்றும் சுற்றுலா கண்காட்சி’ சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சி `மறு தொடக்கம், மறு கட்டமைப்பு, புத்துயிர் மற்றும் சுற்றுலா பொருளாதாரம்'என்ற தலைப்பில் நடைபெறுகிறது.
ஏப்ரல் 2-ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியை, தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன் நேற்று தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரோனா பாதிப்பு காரணமாக 2 ஆண்டுகளுக்குப் பின்னர், தனியார் சுற்றுலா நிறுவனங்களின் பங்களிப்புடன் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. ஆன்மிகம், குடும்ப சுற்றுலாவைத் தொடர்ந்து, இளைஞர்களைக் கவரும் வகையில் சுற்றுலா திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இதையொட்டி, நீர்வழி சாகச விளையாட்டு தொடங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கொடைக்கானலில் ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, இதுவரை சுற்றுலா தலமாக கண்டறிந்திடாத இடங்களை அடையாளம் காணும் பணியும், பல்வேறு குழுக்கள் மூலம் நடைபெற்று வருகிறது. சுற்றலா தலங்களில் சுகாதாரத்தைப் பராமரிக்கவும், விதிமீறல்களைத் தடுக்கவும் வழிவகை செய்யப்படும்.
தமிழக சுற்றுலா குறித்த அனைத்து விவரங்களையும், உதவிகளையும் பெறும் வகையில் பிரத்தியேக செல்போன் செயலி மேம்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இந்தக் கண்காட்சியில், கேரளா, குஜராத், ஒடிசா, கர்நாடகா, கோவா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு, காஷ்மீர் உள்ளிட்ட 13 மாநில சுற்றுலாத் துறைகளின் பிரம்மாண்ட அரங்கங்களும், 40-க்கும் மேற்பட்ட சுற்றுலா தொழில் நிறுவனங்களும் கலந்து கொண்டுள்ளன. தொடக்க விழாவில், தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழக இயக்குநர் சந்தீப் நந்தூரி, இந்திய சுற்றுலாத் துறை மண்டல இயக்குநர் முகமது ஃபாரூக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT