Published : 01 Apr 2022 08:59 AM
Last Updated : 01 Apr 2022 08:59 AM

பள்ளி வேனின் முன்சக்கரம் ஏறியதாலேயே மாணவன் உயிரிழப்பு: பார்வை குறைந்த, காதுகேளாத ஓட்டுநர் - போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

சென்னை: சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வெற்றிவேல்-ஜெனிபர் தம்பதியின் மகன் தீக்‌சித் (8), ஆழ்வார் திருநகர் விரிவாக்கப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 28-ம் தேதி பள்ளி வேன் மோதியதில் தீக்சித் உயிரிழந்தான்.

இது தொடர்பாக, பள்ளித் தாளாளர் ஜெயசுபாஷ், தலைமை ஆசிரியை தனலட்சுமி, வேன் ஓட்டுநர் பூங்காவனம், குழந்தை கவனிப்பாளர் ஞானசக்தி ஆகியோர் மீது வளசரவாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பின்னர், ஓட்டுநர் பூங்காவனம், ஞானசக்தி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையில், போக்குவரத்து, கல்வித் துறை அதிகாரிகள், போலீஸார் ஆகியோர் பள்ளியில் விசாரணை நடத்தினர். பள்ளியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அதில், வேனைவிட்டு இறங்கிய தீக்‌சித், பள்ளிக்கு நடந்து சென்றபோதுதான் விபத்து நேரிட்டது தெரியவந்தது.

மாணவன் செல்வதை கவனிக்காமல் வேனை ஓட்டுநர் முன்பக்கமாக இயக்க, தீக்‌சித் மீது வேனின் முன்சக்கரம் ஏறி இறங்கிய காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. எனவே, வேனை பின்னோக்கி எடுக்கும்போது மாணவன் சிக்கி இறந்ததாக ஏற்கெனவே கூறப்பட்டது உண்மை அல்ல என்பது உறுதி செய்யப்பட்டது.

விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் பூங்காவனம், மாநகராட்சியில் ஓட்டுநராக வேலை பார்த்தவர். அங்கு ஓய்வுபெற்ற பிறகு, இப்பள்ளியில் ஓட்டுநர் வேலைக்கு சேர்ந்துள்ளார். அவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ளது. ஒரு காது சரியாக கேட்கவில்லை. 64 வயதாகும் அவர் தனது ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்கவில்லை என்பது போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இவ்வளவு குறைபாடுகள் இருந்தும், அவற்றை பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் அவரை பணியில் சேர்த்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

மாணவன் தீக்‌சித் உயிரிழந்ததை அடுத்து, சென்னையில் பள்ளிக் குழந்தைகள், அவர்களது பெற்றோர், ஆட்டோ, வேன், கார் ஓட்டுநர்கள் மத்தியில் போக்குவரத்து விதிகள் பற்றிய விழிப்புணர்வை போக்குவரத்து போலீஸார் ஏற்படுத்தி வருகின்றனர். சென்னை முழுவதும் 355 பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x