

சென்னை: மத்திய அரசு பலமாக இருந்தால், நீதிமன்றங்கள் செயலிழந்துவிடும் என்று ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் கூறினார்.
காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில், அரசியல் மற்றும் பொதுவாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
2021-ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா மேடவாக்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில், வரலாற்று அறிஞர் இர்பான் ஹபீப் மற்றும் வேளாண் சட்டத்துக்கு எதிராகப் போராடிய சம்யுக்தா கிசான் மோர்சா அமைப்புக்கு (எஸ்கேஎம்) விருதுடன், தலா ரூ.2.50 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டன.
இந்து குழும வெளியீட்டுப் பிரிவு இயக்குநர் என்.ராம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, விருதுகளை வழங்கினார்.
அவர் பேசியதாவது: விருது பெறும் இர்பான் ஹபீப், உலக அளவில் சிறந்த வரலாற்று அறிஞர். பாட நூல்களில் வரலாற்றுத் திரிபுகளை செயல்படுத்த முனைந்தபோது, உரிய ஆவணங்களை முன்வைத்து, உண்மைக்காக சமரசமின்றிப் போராடினார்.
பிரித்தாளும் முயற்சி பலன் தராது
அதேபோல, எஸ்கேஎம் அமைப்பு கடும் போராட்டத்தால், வேளாண் சட்டங்களை மத்திய அரசை திரும்பப் பெறவைத்தது. தற்போதைய சூழலில், நடுநிலை என்ற பெயரில் அமைதியாக இருப்பது சிறந்த செயலாக இருக்காது. காஷ்மீரில் பண்டிட்கள் மீதான தாக்குதலை ஒருபோதும் ஏற்க முடியாது. அதேநேரம், அதை முன்வைத்து படம் எடுத்து, முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வை வளர்ப்பதையும் அனுமதிக்க முடியாது. பிரித்தாளும் முயற்சி நீண்டகாலத்துக்குப் பலன் தராது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளைப் பொதுச் செயலர் எம்.ஜி.தாவூத் மியாகான் பேசும்போது, ``அரசியல், பொதுவாழ்வில் நேர்மையுடன் செயல்படுபவர்களை, இன்றைய தலைமுறைக்கு அடையாளம் காட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
எஸ்கேஎம் அமைப்பின் போராட்டத்தால், மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றது. அதேபோல, பாசிச சக்திகளின் வரலாற்றுத் திரிபுகளை திறம்பட எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றவர் அறிஞர் இர்பான் ஹபீப். இவர்களை கவுரவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்’’ என்றார்.
ஓ ய்வுபெற்ற நீதிபதி டி.ஹரி பரந்தாமன் பேசும்போது, ‘‘மத்திய அரசு பலமுடன் இருந்தால், நீதிமன்றங்கள் செயலிழக்கும். அரசை சார்ந்துதான் இயங்க வேண்டிய சூழல் உருவாகும்.
மேற்கு வங்க மாநிலத்தில் கணிசமாக வசிக்கும் முஸ்லிம்கள், கல்வி, வேலைவாய்ப்புகளில் மிகவும் பின்தங்கியுள்ளனர். எனவே, அங்குள்ள மார்க்சிய அமைப்புகள், உரிய தீர்வுகாண ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டும்’’ என்றார்.
இந்த நிகழ்ச்சியில், எஸ்கேஎம் அமைப்பின் உறுப்பினர் ஹன்னான் முல்லாஹ், பேராயர் தேவசகாயம், காயிதே மில்லத் கல்லூரி இயக்குநர் அ.ரஃபி, சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சாதிக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.