

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 2 தொகுதிகளை வழங்கும் கட்சிக்கு தங்கள் ஆதரவை தெரிவிப்பது என தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அச்சங்க மாநிலத் தலைவர் சேம.நாராயணன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: எங்கள் சங்க நிர்வாகிகளுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யக் கோரி அதிமுக தலைமை நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினோம். அதற்காக அதிமுகவுக்கும் எங்கள் சங்கத்தின் ஆதரவை தெரிவித்திருந்தோம். தற்போது எங்களுக்கு அதிமுக வில் தொகுதிகள் எதுவும் ஒதுக்கப் படவில்லை. அதனைத் தொடர்ந்து எங்கள் சங்கத்தின் மாநில செயற்குழு சென்னையில் கூட்டினோம். அதில், எங்கள் சங்கத்துக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யும் கட்சிக்கு எங்கள் ஆதரவை தெரிவிப்பது என தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.
பல கட்சிகள் எங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. எந்த கட்சியும் எங்களுக்கு 2 தொகுதிகள் ஒதுக்காவிட்டால், விவசாயிகள் சங்கம், தையல் கலைஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களுடன் இணைந்து தேர்தலை சந்திப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.