

தமாகா தலைவர் ஜி.கே.வாசன், காளையார்கோவிலில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக மக்கள் மத்தியில் தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி, தமாகா நம்பிக்கையான கூட்டணியாக செயல்படத் தொடங்கி உள்ளது.
ஊழல் இல்லாத ஆட்சி, மது இல்லாத தமிழகம், வெளிப்படையான நிர்வாகம் ஆகியவைதான் இன் றைக்கு மக்களுக்கு தேவை. இவற்றை கொடுக்கக்கூடிய ஆட்சியாளர்களுக்கு அங்கீகாரம் வழங்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். எங்கள் கூட்டணி இதை முன்வைத்தே செயல்படுகிறது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை எங்களால் உறுதியாகத் தர முடியும்.
ஊழல் இல்லாத ஆட்சி அமைக்க மக்களை சந்திக்கப்போகும் அரசியல் கட்சியினரும் அப்பழுக்கற்றவர்களாக இருக்க வேண்டும். அப்பெருமை எங்கள் கூட்டணி தலைவர்களுக்கு இருக்கிறது. 5 நாட் களில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அவர்களின் வெற்றிக்காகப் பாடுபடுவோம். தமாகாவை உடைக்கவோ, பிளவுபடுத்தவோ கனவில்கூட யாரும் நினைக்க முடியாது. அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளும் இனிமேல் எந்த உத்தரவாதம் கொடுத்தாலும் அதை மக்கள் நம்பத் தயாராக இல்லை என்றார்.
முன்னதாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் வாசன் கூறிய போது, “தமாகாவில் பிரிந்து சென்றவர்களால் எந்த பாதிப்பும் ஏற்படாது. எங்களுக்கு மரியாதை உள்ள இடத்திலேயே நாங்கள் கூட்டணி அமைத்துள்ளோம். திராவிட கட்சிகளின் ஆட்சியை அகற்றவே தற்போது மக்கள் நலக் கூட்டணியில் இணைந்துள்ளோம்” என்று தெரிவித்தார்.