

மதுரை: மதுரை விமான நிலையப் பாது காப்புப் பணிக்கு இரண்டு சிப்டுக்கு மட்டுமே சிஐஎஸ்எஃப் (மத்திய தொழில் பாதுகாப்புப் படை) வீரர்கள் இருப்பதால் இரவு நேர விமானங் களை இயக்க முடியாமல் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது.
மதுரையில் இருந்து உள்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் வெளி நாடுகளுக்கும் விமானங்கள் இயக் கப்படுகின்றன. கரோனா காலத்தில் சிங்கப்பூருக்கு இயக்கிய இரு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தொற்று கட்டுக்குள் வந்ததால் மார்ச் 29 முதல் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சிங்கப்பூருக்கு மதுரையில் இருந்து விமானம் இயக்கப்பட்டது.
வாரத்தில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமை இந்த விமானத்தை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து புறப்படும் இந்த விமானம் மாலை 6.40 மணிக்கு மதுரை விமான நிலையத்தை வந்தடையும். அதே விமானம் மதுரையில் இருந்து இரவு 9.35 மணிக்குப் புறப்பட்டு சிங்கப்பூர் செல்கிறது.
மார்ச் 29-ம் ேததி சிங்கப்பூர் விமானம் இரவு 9.35-க்கு புறப்பட தயாராக இருந்தது. அப்போது சிஐஎஸ்எஃப் வீரர்கள் தங்கள் பணி முடிவடைந்து விட்டதாக கூறி புறப் பட்டனர்.
சிஐஎஸ்எஃப் வீரர்கள் பற்றாக்குறை
பொதுவாக மதுரை விமான நிலையம் காலை 6 முதல் இரவு 10 மணி வரை இரண்டு சிப்டுகளில் சிஐஎஸ்எஃப் வீரர்கள் பணிபுரிகின்றனர். இவர்களின் கட்டுப்பாட்டில்தான் விமானநிலையமே இயங்குகிறது. விமானநிலையப் பாதுகாப்பு, பய ணிகள் பரிசோதனை இவர்களைக் கொண்டே நடக்கிறது. இரவு 10 மணியோடு இவர்களது பணி முடிந்து விடும். மதுரை விமானநிலையத்தில் முன்பு 3 சிப்டுக்குத் தேவையான வீரர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தற் போது வெறும் 145 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். ஒரு சிப்டுக்கு 70 வீரர்கள் தேவைப்படுகிறது. அதனால், தற்போதுள்ள வீரர்களை வைத்து இரண்டு சிப்டு மட்டுமே பாதுகாப்புப் பணி வழங்கப்படுகிறது.
இரவு 10 மணிக்கு விமானநிலையம் மூடப்படும் நிலையில் ஒரு விமானம் மதுரையில் இருந்து புறப்பட்டால் அந்த விமானம் மற்ற விமானநிலையத்தின் டவரோடு ‘லிங்’ ஆகும் வரை சிஐஎஸ்எஃப் வீரர்கள் பணியில் இருக்க வேண்டும். உதாரணமாக செவ்வாய் இரவு 9.30 மணிக்கு இயக்கப்பட்ட விமானம், அந்தமான் விமானநிலையத்தின் டவரோடு ‘லிங்’ ஆன பிறகே சிஐஎஸ்எஃப் வீரர்கள், மதுரை விமானநிலையத்தை விட்டு வெளியேற வேண்டும்.
ஆனால், சிஐஎஸ்எஃப் வீரர்கள் பணி இரவு 10 மணியோடு முடிகிறது. ஆனால், சிங்கப்பூர் விமானம், அந்த மான் விமானநிலையத்துடன் இரவு 10.30 மணிக்குத்தான் ‘லிங்’ ஆகிறது. அதனால், அதுவரை எங்களால் பணிபுரிய முடியாது என்று மார்ச் 29-ம் தேதி சிஐஎஸ்எஃப் வீரர்கள் விமானநிலையத்தை மூடிவிட்டு வெளி யேறினர்.
தீர்வு காணப்படுமா?
பேச்சுவார்த்தைக்குப் பின் 10.30 மணி வரை பணிபுரிந்தனர். அதனால், வரும் சனிக்கிழமை இதேபோல் இரவு 9.30 மணிக்கு இயக்கப்படும் சிங்கப்பூர் விமானத்துக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதற்குள் இந்த பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வு காண வேண்டும் என தென் தமிழக வர்த்தகர்கள், தொழில் முனைவோர் வலியுறுத்தியுள்ளனர்.
சிஐஎஸ்எஃப் வீரர்கள் பற்றாக் குறையால் இரவு நேர விமானங் களை முன்புபோல் மதுரை விமா னநிலையத்தில் இருந்து இயக்க முடியவில்லை.