Published : 02 Apr 2016 08:19 AM
Last Updated : 02 Apr 2016 08:19 AM

நவீன வசதிகளுடன் தயாராகும் ஜெ. பிரச்சார வாகனம்

முதல்வர் ஜெயலலிதாவுக்கான பிரத்யேக பிரச்சார வாகனம் கோவையில் தயாராகி வருகிறது.

சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 45 நாட்கள் உள்ளன. வேட்பு மனு தாக்கல் தொடங்க இன்னும் 20 நாட்களே உள்ளன. பாஜக தனது முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டது. திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளில் வேட்பாளர் நேர்காணல் முடிந்து பட்டியலை இறுதி செய்து வருகின்றன. ஆளுங்கட்சியான அதிமுகவில் வேட்பாளர் நேர்காணல் இறுதிக்கட்டத்தில் உள்ளது. நேர்காணல் முடிந்ததும் விரைவில் வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும்.

வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட உடனே, பிரச்சாரத்தை தொடங்க அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

திமுகவைப் பொருத்தவரை, கருணாநிதி மற்றும் ஸ்டாலினுக்கு தனித்தனியாக பிரத்யேக வசதிகளுடன் கூடிய வாகனங்கள் தயாரிக்கப்பட்டு, அதில் கருணாநிதி அமர்ந்து வசதிகளை பார்வையிட்டுள்ளார்.

இதே போல், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் பிரத்யேக வசதிகளுடன் கூடிய வாகனம் தேர்தலின்போது வடிவமைக்கப்படும்.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் வரை, பிரச்சார வாகனத்தில் நின்றபடியே மேற்கூரையின் மேல் இருக்கும், கண்ணாடியால் சூழப்பட்ட பகுதியில் பொதுமக்களை பார்த்து முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஆனால், ஆர்.கே.நகரில், வாகனத்தில் இருந்தபடியே பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் அதே பாணியில்தான் முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் மேற்கொள்வார் என அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இம்முறை முதல்வரின் பிரச்சாரத்துக்காக பிரத்யேக வாகனம் பெங்களூருவில் தயாராகியுள்ளது. பிரபல வால்வோ நிறுவனம் இந்த வாகனத்தை வடிவமைத்துள்ளது. தற்போது இந்த வாகனம், கோவையில் உள்ள பிரபல நிறுவனத்தில் உள் அலங்காரப் பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த வாகனம் பொதுமக்களை பார்க்கும் வகையில் நவீன கேமராக்கள், எல்இடி திரைகள், முதல்வருக்கான ஓய்வு அறை, உணவருந்தும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை உள்ளடக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x