Published : 01 Apr 2022 06:18 AM
Last Updated : 01 Apr 2022 06:18 AM
தூத்துக்குடி: திருநங்கைகள் தொழில் தொடங்க முழு மானியத்தில் ரூ.50 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என, தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் சர்வதேச திருநங்கைகள் விழிப்புணர்வு தின விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தார். விளாத்திகுளம் எம்எல்ஏ ஜி.வி.மார்க்கண்டேயன் முன்னிலை வகித்தார். தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் திருநங்கைகளுக்கு தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் அமைச்சர் பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் திருநங்கைகள் மேம்பாட்டுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித் துள்ளார். மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் திருநங்கைகளுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை மற்றும் ஹார்மோன் சிகிச்சை அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருநங்கைகளுக்கு தொழில் தொடங்க கடனுதவியை முழு மானியத்தில் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருநங்கைகள் தொழில் தொடங்க ஒவ்வொருவருக்கும் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். இதனை பயன்படுத்தி திருநங்கைகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தொழில் தொடங்கலாம். அனைத்து திருநங்கைகளுக்கும் தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. அதனை பயன்படுத்தி அனைத்து நலத்திட்டங்களையும் அவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் கல்வி உதவித் திட்டம் குழந்தை திருமணங்களை தடுத்து, பெண்கள் உயர்கல்வி பயில நிச்சயம் வழிகாட்டியாக இருக்கும். இவ்வாறு அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
விழாவில் 16 திருநங்கைகளுக்கு தேசிய அடையாள அட்டைகள், பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்படும் 5 திருநங்கைகளுக்கு சிறப்பு விருதுகள், சத்தியவாணி முத்து அம்மையார் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 75 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. மகளிர் திட்ட இயக்குநர் வீரபத்திரன், மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி, திருநங்கைகள் நலவாரிய உறுப்பினர் பியூட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT