Published : 31 Mar 2022 09:36 PM
Last Updated : 31 Mar 2022 09:36 PM

மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது இல்லம் தேடி கல்வித் திட்டம்: அமைச்சர் அன்பில் மகேஸ்

மதுரை: தமிழக முதல்வரின் இல்லம் தேடி கல்வித் திட்டம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

மதுரை மண்டலத்திற்குட்பட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களுக்கான பணி ஆய்வுக் கூட்டம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் இன்று மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்திலுள்ள ஐடா ஸ்கட்டர் அரங்கில் நடைபெற்றது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி , நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியது: "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்களின் நலன் கருதி பள்ளிக் கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அளித்து ரூ.36,895 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். அதன்படி மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களோடு ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகின்றது.

கரோனா காலங்களில் உலக அளவில் பள்ளி வகுப்பறைகள் 35 வாரங்கள் மூடப்பட்டதாக யுனெஸ்கோ தெரிவித்தது. ஆனால், இந்தியாவில் மட்டும் 73 வாரங்கள் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதை அறிந்து தமிழக முதல்வர் சிந்தித்து இல்லம் தேடி கல்வித் திட்டம் மூலம் மாணவர்கள் கல்வி கற்க வழிவகை செய்தார். இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களுக்கு இல்லம் தேடி கல்வித் திட்டம் முன்னுதாரணமாக உள்ளது.

தமிழக முதல்வர் மாணவர்களின் நலனில் அக்கறையோடு சிந்தித்து செயல்படுகிறார். முதல்வரின் சிந்தனை திட்டங்களை பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் சிறப்பாக செயல்படுத்த வேண்டும். மாணவர்களின் வளர்ச்சியில் ஆரம்பக் கல்வி மிக முக்கியமானது. ஆசிரியர்கள் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப புதிய விஷயங்களை கற்றறிந்து தங்களது தனித்திறமையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை ஆணையர் க.நந்தக்குமார், இல்லம் தேடி கல்வி சிறப்பு பணி அலுவலர் கே.இளம்பகவத், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், எம்எல்ஏக்கள் ஆ.வெங்கடேசன், மு.பூமிநாதன், நா.ராமகிருஷ்ணன், கே.எஸ்.சரவணக்குமார், ஐ.பி.செந்தில்குமார், எஸ்.மாங்குடி, தொடக்க கல்வி இயக்கக இயக்குநர் க.அறிவொளி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் என்.லதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
-

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x