Published : 07 Apr 2016 10:07 AM
Last Updated : 07 Apr 2016 10:07 AM

தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்க மெடிக்கல் சர்டிபிகேட் தயாரிக்கும் பாமகவினர்: ‘டாக்டர் அப்போதுதான் நம்புவாராம்’

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்ப்பதற்காகவே பாமக நிர்வாகிகள் பெரும்பாலானோர் கட்சித் தலைமையை சந்திப்பதை தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுகிறது. முதலமைச்சர் வேட்பாளருக்கு உரிய அனைத்துத் தகுதிகளும் தனக்கு மட்டும்தான் உள்ளது என அன்புமணியும், பாமக நிறுவனர் ராமதாஸும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 234 தொகுதிகளுக்கும் வேட்பாளரை நிறுத்த பாமக தலைமை தயாராகி வருகிறது. இதற்காக விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணலும் நடத்தி முடித்துவிட்டது.

இதனிடையே வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றவர்கள், தேர்தலில் களமிறங்க தயங்குவதாக பாமகவினரே தெரிவிக்கின்றனர். விருத்தாசலத்தைச் சேர்ந்த அக்கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர் கூறும்போது, “எந்தக் கூட்டணியும் இல்லாமல் எப்படி சார் வோட்டு கேக்குறது. எல்லாக் கட்சியிலேயும் வன்னியர் இருக்காங்க! ஆனா அவங்க எல்லாம் பாமகவுக்குத் தான் போடுவாங்கன்னு கணிக்க முடியாது. ஏதோ அன்புமணி கொஞ்சம் விவராமா நிறைய விஷயங்களோடு பேசுறார். அது எங்களுக்குப் பெருமை. எங்க சமுதாயத்துல இருக்கறவங்களும் அதை விரும்புறாங்க. இதன் வெளிப்பாடு அன்புமணி எங்க நிக்கறாரோ அங்க எடுபடும். மற்றத் தொகுதிகளில் அது எடுபடாது. இது இல்லாம தேர்தல் செலவுக்கு என்ன பண்றது. திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிக்கு இணையா செலவு செய்ய பாமகவுல சொல்லிக்கிற மாதிரி 10 பேர்தான் இருக்காங்க. மத்தவங்க நிலைமை எல்லோருக்கும் தெரியும். மேலும் கட்சிக்காரனும் அன்புமணி எங்க நிக்கிறாரோ அங்கதான் வேலை செய்ய ஆர்வம் காட்டுவான். மற்ற தொகுதிகளில் வோட்டு வாங்குவோம். தனியா நிக்கறதால ஓரளவுக்கு எங்க சமுதாயத்தைச் சேர்ந்தவங்க ஓட்டு போடுவாங்க. ஆனா அந்த ஓட்டு வெற்றிபெற உதவாது. இது தான் நிதர்சனமான உண்மை.

இப்பவே எங்கக் கட்சி நிர்வாகிகள்ள பல பேரு மெடிக்கல் சர்டிபிகேட் ரெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க, ஏன்னா டாக்டருக்கிட்ட மெடிக்கல் சர்டிபிகேட் கொடுத்தா தான் நம்புவாரு. நானும் மாநில நிர்வாகிதான். எங்கிட்ட தேர்தல்ல செலவு பண்ற அளவுக்கு பணம் கிடையாது. பூத் செலவுக்கே எதுவும் தராத கட்சி, தேர்தல் செலவுக்கு எப்படிங்க கொடுப்பாங்க. கொளுத்துற வெய்யில்ல வேட்பாளர்தான் அலையலாம், கூட வர்ற கட்சிக்காரனுக்கு ஒரு ஜூஸ் வாங்கிக் கொடுக்கனுன்னா கூட எங்களால முடியாது. தலைமைக்கு புரிஞ்சா சரிதான்” என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x