Published : 31 Mar 2022 01:21 PM
Last Updated : 31 Mar 2022 01:21 PM

10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து | உச்ச நீதிமன்ற தீர்ப்பு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது: அன்புமணி ராமதாஸ்

புது டெல்லி: கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு ரத்து செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு அளித்து தமிழக அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு, பாமக சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்தும், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தும் உத்தரவிட்டது.

இந்நிலையில் இதுதொடர்பாக, பாமக இளைஞரணித் தலைவர் அன்புணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "உச்ச நீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பு எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆனாலும், இதில் சில சாதக அம்சங்களும் இருக்கின்றன. 10.5 சதவீதம் வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில் 7 காரணங்களைக் கூறி இட ஒதுக்கீட்டை ரத்து செய்தனர்.

அந்த 7 காரணங்களில் 6 காரணங்கள் தவறு என்று இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒரே ஒரு காரணத்தால்தான் இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதாவது புள்ளி விவரங்கள் இல்லை என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிபதி தணிகாச்சலம் வழங்கிய அறிக்கையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

எனவே இதுவொரு முடிவு கிடையாது. இதுவொரு தொடர்ச்சிதான். இப்போது தமிழக அரசு உடனடியாக ஒரு ஆணையத்தை உருவாக்கி, வன்னியர்களின் சமூக பொருளாதார நிலை குறித்த புள்ளி விவரங்களைத் திரட்டி, உடனடியாக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றி இந்த இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் என்பது எங்களது கோரிக்கை.

இதை நிச்சயமாக செய்ய முடியும். அவ்வாறு இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறிப்பாக இட ஒதுக்கீட்டை மாநில அரசு கொண்டு வரலாம் என்றும், உள் இட ஒதுக்கீடு கொண்டு வரலாம் என்றும், ஒரு தனிப்பட்ட சமூகத்திற்கு இட ஒதுக்கீடு கொண்டு வரலாம் என்றும், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் தேவையில்லை என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

எனவே, புள்ளி விவரங்களைத் திரட்டி, சட்டப்பேரவையில் சட்டம் கொண்டு வந்து வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். எங்களுக்கு தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. காரணம் 42 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக, மருத்துவர் ராமதாஸ் போராடி, சிறைக்கு சென்று, நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்து, ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்து, இவ்வளவு தியாகம் செய்து கிடைத்த இட ஒதுக்கீடு. இது ஒரே நாளில் கிடைத்தது இல்லை. எங்களுடைய வாழ்க்கையே போராட்டம் தான், எனவே தேவைப்பட்டால் நாங்கள் போராடுவோம்.

புள்ளி விவரம் குறித்து பேசப்படுகிறது. அருந்ததியர் இட ஒதுக்கீட்டிற்கு எந்த புள்ளி விவரமும் கிடையாது. இஸ்லாமியர் இட ஒதுக்கீட்டிற்கு எந்த புள்ளி விவரமும் கிடையாது. 20 சதவீதம் இட ஒதுக்கீடு உள்ள எம்பிசிக்கு புள்ளி விவரம் கிடையாது. 30 சதவீதம் பிசிக்கு அதற்கும் புள்ளி விவரம் கிடையாது. இந்தியாவிலேயே புள்ளி விவரம் கிடையாது. எந்த மாநிலத்திலும் புள்ளி விவரம் கிடையாது. என்ன காரணத்துக்காக வன்னியர்களுக்கு மட்டும் புள்ளி விவரம் கேட்கப்பட்டது என்ற காரணம் தெரியவில்லை. ஆனாலும், தமிழக அரசு இதனை நிச்சயமாக விரைவில் செய்ய வேண்டும்.

தமிழக அரசு இதை செய்யும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். 1984-ல் அம்பாசங்கர் குழு, வீடு வீடாக புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டது. அதற்குமுன் 1969-ல் சட்டநாதன் பரிந்துரை குழு அளித்தது. பிறகு நீதியரசர்கள் ஜனார்த்தனன், தணிகாசலம் பரிந்துரைகள் அத்தனை புள்ளி விவரங்கள் இருக்கிறது. ஆனாலும் நீதியரசர் தணிகாசலம் இன்னும் சரியான முறையில் விவரங்களைக் கொடுத்திருக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் ஆலோசித்து எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x