

ஓசூர் அருகே கர்நாடக ரவுடி கவாலா கொலை செய்யப்பட்ட வழக்கில், பழைய கூட்டாளி உள்பட 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூர் மடிவாளா பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (எ) கவாலா (43). கர்நாடக மாநிலத்தின் டாப் 10 ரவுடிகளில் ஒருவரான கவாலா, கடந்த 24-ம் தேதி இரவு பெங்களூரில் நடந்த திரைப்பட விழாவில் கலந்து கொண்டபிறகு காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பெங்களூர் - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் வழி மறித்த கும்பல் ஒன்று, கார் கண்ணாடிகளை உடைத்து, மிளகாய் பொடி தூவி கவாலாவை கொடூரமாக வெட்டிக் கொலை செய்தது.
இது குறித்து கவாலாவின் மனைவி சாந்தி கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணம்மாள் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில் கவாலாவை கொலை செய்த கும்பல், மடிவாளா பகுதியில்பதுங்கியிருப்பதாக பெங்களூர் குற்றப்பிரிவு காவல்துறையின ருக்குத் தகவல் கிடைத்தது. அவர்கள் உதவியுடன் தனிப்படை காவலர்கள் 9 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.
விசாரணையில் மடிவாளா பகுதியைச் சேர்ந்த பாபு (எ) நக்ராபாபு (44), மாருதி நகரைச் சேர்ந்த ஹீராலால் பிரசாத் (33), அருண்குமார் (எ) அருண் (38), சுனில்கவுடா (26), சேத்தான் (22), விஸ்வநாதன் (எ) விஸ்வா (33), முனிராஜ் (39), நரேந்திரா (எ) நரி (21) மற்றும் சதீஸ்ரெட்டி (எ) சதீஷா (22) ஆகிய 9 பேரும் சேர்ந்து கவாலாவை கொலை செய்தது தெரியவந்தது.
இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கண்ணம்மாள் நிருபர்களிடம் கூறுகையில், பெங்களூர் பகுதியில் ரவுடியாக வலம் வந்த விஜயகுமார் (எ) கவாலாவுடன் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கூட்டாளியாக இருந்த பாபு என்கிற நக்ராபாபு, தொழிலில் ஏற்பட்ட மோதல் காரணமாக தனியாக பிரிந்து சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார், பாபுவை கொலை செய்ய முயற்சி செய்தார். இதில் படுகாயம் அடைந்த பாபு தப்பியுள்ளார். இதேபோல் பாபு மற்றும் அவரது கும்பல் கவாலாவை வேலூரில் இருந்தபோது அவரை கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். இந்நிலையில் கவாலா, ஓசூர் அரசனட்டி பகுதியில் குடியேறினார். இதையறிந்த பாபு தரப்பினர், அவரின் செயல்பாடுகளை கண்காணித்து கடந்த 24-ம் தேதி கொலை செய்துள்ளனர். இந்த கொலையில் குட்டி என்ற ரவுடிக்கு தொடர்பு இல்லை. தொழில் போட்டி காரணமாகவே கொலை நடந்துள்ளது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார். கைது செய்யப்பட்ட 9 பேரையும் காவல்துறையினர் ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.