Published : 31 Mar 2022 06:08 AM
Last Updated : 31 Mar 2022 06:08 AM
சென்னை: தமிழகத்தில் ஓராண்டுக்குள் பாரத் நெட் திட்ட பணிகள் முடிக்கப்பட்டு அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் அதிவேக இன்டர்நெட் வசதி வழங்கப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் முன்னிலையில், தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (டான்பிநெட்), தமிழகத்தில் பாரத் நெட் திட்டத்தை செயல்படுத்தும் முதன்மை திட்ட ஒருங்கிணைப்பாளரான பாலிகேப் என்ற நிறுவனம்இடையே சேவை தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாரத் நெட் திட்டமானது தமிழகத்தில் உள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளையும் கண்ணாடி இழை கம்பிவடம் மூலம் இணைத்து அதிவேக இன்டர்நெட் வழங்கும் திட்டமாகும். டான்பி நெட் நிறுவனம்மூலம் ரூ.1,815.32 கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்தபாரத் நெட் திட்டத்தின் ஒரு பேக்கேஜ் திட்டத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இத்திட்டம் ‘ஏ, பி, சி, டி’ என 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளன. இதில் ஏற்கெனவே ‘சி’ ‘டி’ என 2 ‘பேக்கேஜ்’களுக்கான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இன்று ‘ஏ’ பேக்கேஜ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு வழக்கு முடிவுக்கு வந்தவுடன் ‘பி’ பேக்கேஜும் நிறைவேற்றப்படும். அடுத்த ஓராண்டுக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் வசதியை தடையின்றி மக்கள் பயன்படுத்தும் வகையில் திட்டம் வெற்றிகரமாக அமையும்.
பாலிகேப் நிறுவனத்துடன் இன்று ரூ.509 கோடி மதிப்பிலான ‘ஏ’ பேக்கேஜுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இ-சேவை மையங்கள் கவனிக்கப்படாமல் இருந்த நிலையில், இந்த ஆட்சியில் 56 புதிய சேவைகள், அம் மையங்கள் மூலம்வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய இடங்களிலும் இ-சேவை மையங்கள் தொடங்கப்படும். அந்தஇடங்களில் தனியார் விண்ணப்பித்தால், முன்னுரிமை அடிப்படையில் விதவைகள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT