Published : 31 Mar 2022 09:01 AM
Last Updated : 31 Mar 2022 09:01 AM
சென்னை: பிராந்திய வளர்ச்சி நாட்டுக்கு உகந்ததாக இருக்காது, அது ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் என்று தமிழகஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 22-வது பட்டமளிப்பு விழா சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. தமிழக ஆளுநரும், பல்கலை. வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். இணைவேந்தரும், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
இதில், 282 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு ஆளுநர் ரவி பதக்கங்களை வழங்கினார். பிவிஎஸ்சி படிப்பில் முதலிடம் பெற்ற, திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர் ஆர்.சங்கருக்கு 26 பதக்கம், 2 விருதுகளை ஆளுநர்வழங்கினார். திருப்பூரைச் சேர்ந்தமாணவர் சங்கரின் தாய் புஷ்பராணி,தந்தை ராமசாமி ஆகியோர் பனியன் நிறுவனத் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும்போது, ‘‘சூழலியல் சமத்துவத்துக்கு இதர உயிரினங்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டியதுஅவசியம். 2070-ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வற்ற நிலையை உருவாக்கவும், 2030-க்குள் 500 ஜிகாவாட் தூய்மையான எரிசக்தியை உற்பத்தி செய்யவும் இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. நாட்டில்2014-ல் 400 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இருந்தன. 2021-ல் இந்த எண்ணிக்கை 10 ஆயிரமாக அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் இந்தியா வேகமாக முன்னறி வருகிறது.
நாம் எப்போதும் தேசியப் பார்வையை மனதில் கொண்டிருக்க வேண்டும். பிராந்திய அளவில் இல்லாமல், தேசிய உணர்வுடன் சிந்தித்து செயல்பட வேண்டும். பிராந்திய அளவிலான முன்னேற்றம் சம வளர்ச்சியை உண்டாக்காது. பிராந்திய வளர்ச்சி நாட்டுக்கு உகந்ததாக இருக்காது, ஏற்றத்தாழ்வையே ஏற்படுத்தும்.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் உணவு, உறைவிடம், சுகாதாரம், கல்வி, எரிசக்தி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும்.2047-ம் ஆண்டுக்குள் பொருளாதார, ஆன்மிக ரீதியாகவும், ராணுவவலிமையிலும் இந்தியா முன்னணியில் திகழ வேண்டும்’’ என்றார்.
தேசிய வேளாண் அறிவியல் கழகச் செயலர் டாக்டர் பி.கே.ஜோஷி பேசும்போது, ‘‘வேளாண் வருவாயில் 40 சதவீதம் கால்நடை வளர்ப்பு மூலமாகவே உள்ளது. சுயஉதவிக் குழு, ஒப்பந்த விவசாயமுறை, வேளாண் தொகுப்புகள் போன்றவை, கால்நடை பராமரிப்புத் துறையில் இந்தியாவை முன்னணி நாடாக மாற்றும். இந்த துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன’’ என்றார்.
கால்நடை பராமரிப்புத் துறைஅமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், கால்நடை மருத்துவப் படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் 12 புதிய கல்வி அறக்கட்டளை விருதுகளை அறிவித்தார். விழாவில், பல்கலை. துணைவேந்தர் கே.என்.செல்வகுமார், பதிவாளர் டென்னிஸ் ஞானராஜ் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT