Published : 31 Mar 2022 09:21 AM
Last Updated : 31 Mar 2022 09:21 AM

கல்விக்கான மேல் வரியாக வசூலிக்கப்பட்ட ரூ.94 ஆயிரம் கோடியை செலவிடாதது ஏன்? - மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி, என்விஎன்.சோமு கேள்வி

சென்னை: கல்விக்கான மேல் வரியாக வசூலிக்கப்பட்ட ரூ.94 ஆயிரம் கோடியை செலவிடாதது ஏன் என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி என்விஎன்.சோமு கேள்வி எழுப்பினார்.

மாநிலங்களவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதுஅவர் பேசியதாவது: உயர்நிலை,மேல்நிலைக் கல்வி மேம்பாட்டுக்கென செஸ் எனப்படும் கூடுதல்வரியை மத்திய அரசு வசூலிக்கிறது. இதன்படி, 2006-07-ம் ஆண்டுமுதல் வசூலான ரூ.94 ஆயிரம் கோடி நிதி, மத்திய அரசின் ஒருங்கிணைந்த நிதியத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது தவறாகும்.

கூடுதல் வரியாக வசூலாகும் தொகை, எந்த திட்டத்துக்காக வசூலிக்கப்பட்டதோ, அதற்கென தனியாக இருப்பு வைக்க வேண்டுமென்பது விதியாகும். தொடக்கக் கல்விக்கென வசூலிக்கப்படும் கூடுதல் வரியை செலவிட பிரத்தியேகத் திட்டங்கள் உள்ளன. ஆனால், உயர்நிலை, மேல்நிலைக் கல்விக்கென வசூலாகும் கூடுதல் வரியை செலவழிக்க பிரத்தியேக திட்டங்கள் எதுவுமில்லை. இதனால், ரூ. 94 ஆயிரம் கோடி பயன்படுத்தப்படாமல்உள்ளது. கரோனா காலத்தில்கூட இந்த நிதியைப் பயன்படுத்தாதது வேதனைக்குரியது.

வளர்ந்த நாடுகளைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர்களின் கருத்துபடி, பெருந்தொற்றுக் காலத்தில் இறுதியாக மூடப்பட வேண்டியது பள்ளிகள்தான். ஆனால், துரதிருஷ்டவசமாக இந்தியாவில் 82 வாரங்கள் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால், 2018-21 காலகட்டத்தில் குழந்தைகள் பள்ளியில்சேருவது பெரிதும் பாதிக்கப்பட் டது. மேலும், கற்கும் திறன் குறைந்ததுடன், ஊட்டச்சத்து குறைபாடும் ஏற்பட்டது. ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட குழந்தைகள் உள்ள நாடுகளில் இந்தியா பிரதான இடம் பிடிக்கும் அளவுக்கு நிலை மோசமானது.

பள்ளி மாணவர்களின் நலனுக்காக வசூலிக்கப்பட்ட கூடுதல்வரியை முறையாகப் பயன்படுத்தாததும் இதுபோன்ற நிலைக்கு முக்கியக் காரணமாகும். மத்திய அரசின் பொறுப்பற்றத் தன்மையும், சரியான பொருளாதாரப் பார்வைஇல்லாததும் கூடுதல் காரணங் களாகும். எனவே, கரோனா காலத்தில் பள்ளிக் கல்வியில் ஏற்பட்ட மோசமான விளைவுகளை மாற்றும்வகையில், கல்விக்காக வசூலிக்கப்பட்ட கூடுதல் வரிப் பணத்தை முறையாகச் செலவிடும்படி மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x