

கிருஷ்ணகிரி: சசிகலாவை அரசியல்ரீதியாக புறக்கணித்துவிட்டோம் எனகிருஷ்ணகிரியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக ஆட்சி தோல்வியடைந்த காரணத்தினால் ‘திராவிட மாடல்’ ஆட்சி என்ற பெயரில் அண்ணா காலத்தில் கொண்டு வந்த சிந்தனைகளை மீண்டும் கூறி ஆட்சி செய்கின்றனர். ஆனால் அண்ணாவின் சிந்தனைகளை எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி, பழனிசாமி உள்ளிட்டோர் நிறைவேற்றி உள்ளனர்.
ஆனால் தன்னை காப்பாற்றி கொள்வதற்காக ஸ்டாலின் ‘திராவிட மாடல்’ ஆட்சி என்ற முகமூடியை மாட்டி வைத்துள்ளார். அமைச்சர் ராஜகண்ணப்பன் சமூக ரீதியாக திட்டுவதாக அரசு ஊழியரே கூறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அண்ணாகொள்கையை பின்பற்றினால்அவரை அமைச்சர் பதவியில்இருந்து நீக்கி சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உதவியாக இருந்தவர் சசிகலா. ஜெயலலிதா இறக்கும் வரை அவருக்கு நிழலாக இருந்தவர் பன்னீர்செல்வம். எனவே அவரை சந்திக்கச் செல்லும்போது சசிகலாவை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் அவர் மீது தனிப்பட்ட மரியாதை இருப்பதாக ஆறுமுகசாமி கமிஷனில் கூறியுள்ளார். அதில் ஒன்றும் தவறில்லை; ஆனால் கட்சியை பொறுத்தவரை சசிகலாவை சந்தித்தவர்களை கட்சியை விட்டு நீக்கி கையெழுத்திட்டவரே பன்னீர்செல்வம்தான். எனவே சசிகலாவை அரசியல்ரீதியாக புறக்கணித்துவிட்டோம் என்றார்.