Published : 31 Mar 2022 06:07 AM
Last Updated : 31 Mar 2022 06:07 AM

வரிகள் உயர்வு இல்லை, ரூ.19.31 கோடி பற்றாக்குறை - கோவை மாநகராட்சி பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

கோவை மாநகராட்சி மன்ற சிறப்பு கூட்டத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்த மேயர் கல்பனா ஆனந்தகுமார். உடன், ஆணையர் ராஜகோபால் சுன்கரா, துணை மேயர் இரா.வெற்றிசெல்வன். (அடுத்தபடம்) கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள். படங்கள்: ஜெ.மனோகரன்

கோவை: கோவை மாநகராட்சியின் 2022 –2023-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேற்று தாக்கல் செய்தார்.

கடந்த ஆண்டுகளில் உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டு ரூ.19 கோடியே 31 லட்சம் நிதி பற்றாக்குறை யுன் பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி விக்டோரியா அரங்கில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் மாமன்ற சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. துணை மேயர் இரா.வெற்றிசெல்வன் மற்றும் அனைத்து கவுன்சிலர்களும் பங்கேற்றனர். மாநகராட்சி நிதிநிலை அறிக்கையை ஆணையர் ராஜகோபால் சுன்கரா மேயரிடம் அளிக்க, அவர் மன்றத்தில் தாக்கல் செய்தார்.

இதில், பொது நிதி, குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் நிதி, ஆரம்பக் கல்வி நிதி என்ற வகைகளில் வருவாய் ரூ.834 கோடியே 26 லட்சம்என்றும், மூலதன வருவாய் ரூ.1,483கோடியே 71 லட்சம் என்றும், மொத்தவருவாய் ரூ.2,317 கோடியே 97 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த வருவாய் செலவினம் ரூ.718 கோடியே 60 லட்சம் என்றும்,மூலதன செலவினம் ரூ.1,618 கோடியே 68 லட்சம் எனவும், மொத்த மாக செலவுகள் ரூ.2,337 கோடியே 28 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ரூ.19 கோடியே 31 லட்சம்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி உட்பட இதர வரிகள் உயர்வு தொடர்பான அறிவிப்புகள் இல்லை.

பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட் டுள்ள முக்கிய அம்சங்கள்: மாநகராட்சியின் 60 வார்டுகளில் 24 மணி நேரம் குடிநீர் வழங்கும் திட்டம் (அம்ரூத் திட்டம்) 2025-ம் ஆண்டில் முழுமை பெற்று மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். ஆர்.எஸ்.புரம் காதுகேளாதோர் உயர் நிலைப்பள்ளியில் ‘மாதிரி பள்ளி’ அமைக்கப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆடிஸ் வீதியில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க ரூ.2.5 கோடி ஒதுக்கீடு, விடுபட்ட இணைப்பு சாலை பணிகள் நடப்பு நிதியாண்டில் உள்ளூர் திட்டக் குழும நிதியில்ரூ.144.80 கோடியில் மேற்கொள்ளப் படும்.

பெரியகடை வீதி, ராஜ வீதி, கிராஸ்கட் சாலை பகுதிகளில் மோட்டார் இல்லாத வாகன போக்கு வரத்து மற்றும் நடைபாதை மேற்கொள்ளப்படும்.

செம்மொழி பூங்கா பணிக்கு முதற்கட்டமாக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. செயல்பாடு அடிப்படையில் சிறந்த கவுன்சிலரைத் தேர்வு செய்து விருது வழங்கப் படும்.

சென்னை, மும்பை, புனே, இந்தூர் உள்ளிட்ட பெருநகரங்களில் தனியார் நிறுவனத்திடம் திடக் கழிவு மேலாண்மை பணிகள் ஒப்படைக்கப் பட்டு திறம்பட கவனிக்கப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணியை மேம்படுத்தும் விதமாக மாநகராட்சி யில் ஒரு மண்டலம் பரீட்சார்த்த அடிப்படையில் தனியார் நிறுவனத்தினரைக் கொண்டு பராமரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் ‘திடக்கழிவு உபயோகிப்பாளர் கட்டணம்’ வசூலிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சியில் இதுவரை கட்டணம் வசூலிக்கப் படாமல் உள்ளது. இதனால் ‘ஸ்வச் சர்வேக்சன்’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் ஊக்கத்தொகையை பெற இயலாமல் உள்ளது. எனவே, சொத்து வரியுடன் சேர்த்து திடக்கழிவு பயன்பாட்டுக் கட்டணம் நடப்புநிதியாண்டில் வசூலிக்க முடிவு செய் யப்பட்டுள்ளது.

மாலையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.

வீடுகளுக்கு குப்பை வரி

கோவை மாநகராட்சி பட்ஜெட் டில் சொத்து வரியுடன் சேர்த்து திடக்கழிவு பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் வெளியேற்றப்படும் குப்பைக்கு உரிமையாளர் களிடம் வரி வசூலிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி துணை ஆணையர் மோ.ஷர்மிளா கூறும்போது, “இந்த நடைமுறை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்ட ஒன்றுதான். மத்திய அரசின் நிதியை பெறுவதற்காக இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வீடுகளுக்கு குப்பை வரியாக அப்போது ரூ.10 நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தற்போதும் அதே கட்டணம் குப்பை வரியாக நிர்ணயம் செய்யப்படுமா அல்லது மாற்றங்கள் செய்யப்படுமா என்பது, இதுதொடர்பாக அடுத்து கூட்டப்படும் மாமன்ற கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளால் முடிவு செய்யப்படும்.

மக்கள் பிரதிநிதிகளின் முடிவு இறுதி செய்யப் பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்படும். அதற்கு பிறகே இந்த நடைமுறை செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்” என்றார்.

பொதுமக்களுக்கு பயன் இல்லாத மாநகராட்சி பட்ஜெட்: வெளிநடப்பு செய்த அதிமுக கவுன்சிலர்கள் விமர்சனம்

மாநகராட்சியில் தாக்கல் செய்யப் பட்டுள்ள பட்ஜெட் பொதுமக்களுக்கு பயன் இல்லாதது என அதிமுக கவுன் சிலர்கள் விமர்சனம் செய்ததுடன், கூட்டத் தையும் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

கோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத் தின் இறுதியில் அதிமுக கவுன்சிலர்கள் சர்மிளா சந்திரசேகர் (38-வது வார்டு), பிரபாகரன் (47-வது வார்டு), ரமேஷ் (90-வது வார்டு) ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

இதுகுறித்து கவுன்சிலர் பிரபாகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை மாநகராட்சியின் பட்ஜெட் எந்த தரப்பு மக்களுக்கும் எந்த விதத்தி லும் பயன்படாது. மாநகராட்சியில் ஏற்கெனவே இருக்கும் திட்டங்களையே அறிவித்து இருக்கின்றனர். புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. மாநகராட்சி பகுதிகளில் சாலைகள் கடந்த 6 மாதங்களாக கடுமையாக சேதம் அடைந்து உள்ளன. இத்தகைய சூழலில் சாலை வசதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி போதாது.

இளைஞர்களின் திறன் மேம்படுத் தப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு எவ்வளவு நிதி ஒதுக்குகிறோம் என்பது உள்ளிட்ட தகவல்கள் இல்லை. மாநகராட்சி பகுதியில் தெருவிளக்குகளுக்கு மின்சார கட்டணம் அதிக அளவில் செலவிடப்படுகிறது. ஆனால் காற்றாலை மின் உற்பத்தி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. மொத்தத்தில் மாநகராட்சி பட்ஜெட்டால் எந்த பயனும் இல்லை.

கடந்த காலங்களில் உபரியாக இருந்த பட்ஜெட், தற்போது பற்றாக்குறையாக உள்ளது. எனவே, அதிமுக சார்பில் நாங்கள் பட்ஜெட் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்கிறோம். பட்ஜெட் மீதான விவாத கூட்டத்தையும் புறக்கணிக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x