எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கில் தனியார் நிறுவனங்களிடமிருந்து ரூ.110 கோடியை பறிமுதல் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நீட்டிப்பு
சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் வழக்கில் தனியார் நிறுவனங்களிடமிருந்து ரூ. 110 கோடியை பறிமுதல் செய்ய ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ஊழல் வழக்கு பதிவு செய்தனர்.
எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய உறவினர்கள் நடத்தி வந்த கேசிபி இன்ப்ரா, ஆலன் கோல்டு அண்ட் டைமண்ட் ஆகிய தனியார் நிறுவனங்களின் வங்கி கணக்கில் இருந்த ரூ. 110.93 கோடி நிரந்தர டெபாசிட் தொகையை லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடக்கி வைத்துள்ளனர். இந்த தொகையை பறிமுதல் செய்ய அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடைய ரூ.110 கோடியே 93 லட்சத்து 20 ஆயிரத்து 174-ஐ பறிமுதல் செய்ய இடைக்கால உத்தரவிட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓம்பிரகாஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, கேசிபி இன்ப்ரா நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், எங்களது நிறுவனம் கோவையில் உள்ளது. எனவே இந்த மனுவை சென்னையில் தாக்கல் செய்ய முடியாது.
மேலும் உரிய சட்ட விதிகளுக்கு உட்பட்டு இந்த மனு தாக்கல் செய்யப்படவில்லை, என தெரிவித்து இருந்தது. அதேபோல, ஆலன் கோல்டு அன்ட் டைமண்ட் நிறுவனம் தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், எங்கள் நிறுவனத்தின் நிதியை பறிமுதல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறையினர் கூறும் காரணங்கள் ஏற்புடையது அல்ல. எனவே, பறிமுதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்க வேண்டும், என தெரிவித்திருந்தது.
ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில், இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டு விட்டது. இந்தசூழலில் இந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கக்கூடாது. இதுதொடர்பாக கூடுதல் மனு தாக்கல் செய்யவுள்ளோம், என தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதி, ஏற்கெனவே தாக்கல் செய்துள்ள மனுவில் உள்ள குறைபாடுகளைக் களைந்து கூடுதல் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்.5-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். அதேநேரம் இந்த நிறுவனங்களிடமிருந்து பறிமுதல் செய்ய ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நீட்டித்தும் உத்தரவிட்டுள்ளார்.
