

தேர்தல் தோல்வியால் துவண்டு கிடக்கும் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் திமுக தலைவர் கருணாநிதியின் 91-வது பிறந்தநாள் விழாவை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகின்றன. சென்னையில் 3 நாட்கள் விழா நடக்கிறது.
நடந்து முடிந்த நாடாளு மன்றத் தேர்தலில் 34 தொகுதி களில் போட்டியிட்ட திமுக, ஒரு இடத்தில்கூட வெற்றி பெற வில்லை. இரண்டு இடங்களில் டெபாசிட்டையும் இழந்தது. தோல்விக்குப் பொறுப்பேற்று பொருளாளர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய முன்வந் தார். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் போராட்டத் தையடுத்து அந்த முடிவைக் கைவிட்டார்.
இந்நிலையில், தோல்வியால் துவண்டு கிடக்கும் திமுகவினரை உற்சாகப்படுத்தும் விதமாக, கட்சித் தலைவர் கருணாநிதியின் 91-வது பிறந்த நாளை 3 நாட்கள் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கருணாநிதிக்கு ஜூன் 3-ம் தேதிதான் பிறந்தநாள் என்றாலும் இன்றிலிருந்தே விழாக்கள் தொடங்குகின்றன.
திமுக மகளிரணி சார்பில் கருணாநிதியின் பிறந்த நாள் விழா அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இதில் திண்டுக்கல் லியோனி தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு இலக்கிய அணி சார்பில் நடக்கும் நிகழ்ச்சியில், தமிழறிஞர் பிச்சினிக்காடு இளங்கோவுக்கு ரூ.10 ஆயிரம் கொண்ட கலைஞர் இலக்கிய பொற்கிழியும், கேடயமும் வழங்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு செல்வகணபதி தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது.
நாளை (2-ம் தேதி) மாலை 4.30 மணிக்கு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் திமுக இளைஞரணி சார்பில் திரைப்பட பாடகர்கள் பங்கேற்கும் தெம்மாங்கு தேனரங்கம், தமிழறி ஞர்கள் பங்குபெறும் வாழ்த் தரங்கம் நடக்கவுள்ளது. வாழ்த் தரங்குக்கு கவிஞர் வைரமுத்து தலைமை தாங்குகிறார்.
கருணாநிதி பிறந்த நாளான 3-ம் தேதி காலை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ரத்தம் மற்றும் கண் தான முகாம்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அன்று காலை 7 மணிக்கு மெரினா கடற்கரையிலுள்ள அண்ணா நினைவிடத்திலும், பின்னர் பெரியார் நினைவிடத்திலும் கருணாநிதி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்து கிறார். காலை 9 மணி முதல் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் தொண்டர்களைச் சந்தித்து வாழ்த்து பெறுகிறார். மாலையில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கும் பிறந்தாள் விழா பொதுக்கூட்டத்திலும் கருணாநிதி பங்கேற்கிறார்.