கிருஷ்ணகிரியில் வெண்பட்டு வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிகழாண்டில் 21 லட்சத்து 95 ஆயிரத்து 482 கிலோ பட்டுக் கூடு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி அருகே கனகமூட்லு, கணவாய்ப்பட்டி, கிட்டம்பட்டி அவதானப்பட்டி ஊராட்சிகளில் பட்டுவளர்ச்சித்துறை சார்பில், மல்பெரி தோட்டங்கள் பட்டுபுழு வளர்ப்பு மற்றும் பட்டுகூடு உற்பத்தி செய்யப்படுவதை, ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி ஆய்வு செய்தார். பெரியமுத்தூரில் கிராமிய சிறுபட்டு நூற்பாலை கட்டிடங்களை ஆய்வு செய்த ஆட்சியர் கூறியதாவது:
மாநில அளவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டு உற்பத்தி அதிக அளவில் செய்யப்படுகிறது. குறிப்பாக 10 ஒன்றியங்களில் 6,795 ஏக்கர் பரப்பில் 3,482 விவசாயிகளால் மல்பெரி சாகுபடி செய்யப்பட்டு பட்டு தொழில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிகழாண்டில், 21 லட்சத்து 95 ஆயிரத்து 482 கிலோ பட்டுக் கூடு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது பெரும்பாலான விவசாயிகள் வெண்பட்டு வளர்ப்பில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். 21 நாட்களில் வருமானம் பெற்றுத் தரும் தொழிலாகவும், மகளிருக்கு ஏற்ற தொழிலாகவும் பட்டு வளர்ப்பு உள்ளது.
மல்பெரி மரம் நடவு மேற்கொள்ள 1 ஹெக்டேருக்கு ரூ.15 ஆயிரமும், மண்புழு உரக் குழி அமைக்க ரூ. 12 ஆயிரத்து 500-ம் மானியமாக வழங்கப் படுகிறது. விவசாயிகள் பட்டு உற்பத்தி மேற்கொள்ளும் போது உதவி ஆய்வாளர்கள், இளநிலை ஆய்வாளர்கள் நேரடியாக சென்று புழு வளர்ப்புமனையை கிருமி நீக்கம் செய்தல், மல்பெரி தோட்டங்களுக்கு உரம் இடுதல் மற்றும் தோட்ட பராமரிப்பு பணிகள் குறித்த ஆலோசனைகள் வழங்கி வருகிறார்கள். பட்டு உற்பத்தி விவசாயிகள் அரசு வழங்கும் நலத்திட்டங்கள் மற்றும் தொழில் உதவிகளை பெற்று மேலும் உற்பத்தியை பெருக்கிவாழ்வாதாரம் மற்றும் பொருளா தாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.
ஆய்வின் போது பட்டு வளர்ச்சித்துறை மண்டல இணை இயக்குநர் ரமேஷ், உதவி இயக்குநர் சண்முகப்பிரியா, உதவி ஆய்வாளர் சசிகலா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
