Published : 31 Mar 2022 06:17 AM
Last Updated : 31 Mar 2022 06:17 AM

தருமபுரி: வறண்ட விளைநிலங்களில் ‘மேனுவல்’ சொட்டுநீர்ப் பாசனம் மூலம் மரக்கன்றுகளை காக்கும் விவசாயிகள்

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தின் வறண்ட விளைநிலங்களில் நடவு செய்த மரக் கன்றுகளை காக்க விவசாயிகள் சிலர் ‘மேனுவல்’ சொட்டு நீர் பாசன முறையை பின்பற்றி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டத்தில் 8 அணைகள் இருந்தபோதும் மாவட்டத்தின் பெரும்பகுதி விளைநிலங்கள் கோடைகாலத்தில் பாலைவனத்துக்கு நிகராக வறட்சியை வெளிக்காட்டத் தொடங்கி விடும். இவ்வாறான நிலங்களில் பருவ மழைக் காலங்களில் குறுகிய கால பயிர்களை மட்டுமே சாகுபடி செய்ய முடியும். அவ்வாறு சாகுபடி செய்தாலும், பயிர்களில் ஏற்படும் நோய்த் தாக்குதல், விவசாய பணிகளுக்கான ஆள் பற்றாக்குறை, குரங்கு, மயில், காட்டுப்பன்றி, யானை போன்ற வன விலங்குகளால் விளைநிலங்களில் ஏற்படும் சேதம் போன்ற சவால்கள் விவசாயிகளுக்கு பெரும் வேதனை அளித்து வருகிறது.

எனவே, விவசாயிகள் படிப்படியாக மரப்பயிர் விவசாயத்துக்கு மாறி வருகின்றனர். இருப்பினும், இந்த மரப்பயிர்களும் கூட குறிப்பிட்ட உயரம் வளரும் வரை கோடை காலங்களை கடந்து வருவது சிரமமாக உள்ளது. இவ்வாறு, கடும் வறட்சிக்கு இலக்காகும் பென்னாகரம் வட்டத்தில் உள்ள சில விவசாய கிராமங்களில் 35 விவசாயிகளை தேர்வு செய்து, குறைந்த நீரைக் கொண்டு ‘மேனுவல்’ முறையில் பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் மேற்கொள்ள தொண்டு நிறுவனம் மூலம் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நபார்டு வங்கியின் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டத்தின் கீழ் இந்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

காணும் இடமெங்கும் கிடைக்கும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பழைய மண் சட்டிகள் போன்றவற்றின் அடிப்பகுதியில் சிறிய துவாரமிட்டு, அதன் வழியே துணியால் ஆன திரியை செலுத்தி விட வேண்டும். பாட்டிலின் வெளியே சிறிதளவு திரி நீட்டியிருக்கும்படி அமைத்த பின்னர் அவற்றில் தண்ணீரை நிரப்பி செடிகளின் அருகே வைத்து விட்டால், சுமார் 2 மணி நேரத்துக்கு துளித்துளியாய் அந்த தண்ணீர் செடிகளின் வேரைச் சுற்றி ஈரம் பரவச் செய்வதே ‘மேனுவல்’ முறை சொட்டு நீர்ப்பாசனம்.

இந்த பயிற்சியை பெற்றவர்களில் வட்டுவன அள்ளி, பெரிய தும்கல், சின்ன தும்கல் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் ‘மேனுவல்’ சொட்டுநீர்ப் பாசன முறையை தீவிரமாக பின்பற்றி வருகின்றனர். அவர்களில் ஒருவரான சக்திவேல் என்ற விவசாயி கூறியது:

ஆள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் இதர பயிர் சாகுபடிகளை தவிர்த்து மரப்பயிர்களுக்கு மாறி வருகிறோம். மா, கொய்யா, நெல்லி, நாவல் உள்ளிட்ட கனிகள் தரும் மரக்கன்றுகள், மரச் சாமான்களுக்கு பயன்படும் மரக்கன்றுகள் ஆகியவற்றை நட்டு பராமரித்து வருகிறோம். குறிப்பிட்ட ஆண்டுகள் வரை அவற்றை பராமரித்து வளர்த்து விட்டால் பின்னர் அவை மானாவாரி நிலையை அடைந்து விடும். அதுவரை, ஒவ்வொரு ஆண்டின் கோடைகாலமும் அந்த மரக்கன்றுகளின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.

அதற்குத் தீர்வாக இந்த ‘மேனுவல்’ சொட்டுநீர் பாசன நுட்பம் அமைந்துள்ளது. குறைந்த நீரைக் கொண்டு செடிகளின் வேரைச் சுற்றி ஏற்படுத்தப்படும் ஈரம், கூடுதல் நாட்கள் உலராமல் இருக்க வேரைச் சுற்றி காய்ந்த சருகுகளைக் கொண்டு மூடாக்கு ஏற்படுத்துகிறோம். இந்த முறையால் குறைந்த தண்ணீர், குறைந்த ஆள் தேவை, குறைந்த நேரம் ஆகியவற்றை கொண்டு செடிகளை பராமரிக்க முடிகிறது. நகரம் தொடங்கி கிராமங்கள் வரை தரையில் உருண்டு கொண்டிருக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள் எங்களால் சேகரிக்கப்பட்டு உபயோகமாக பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம், பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பை குறைப்பதில் நாங்களும் முடிந்தளவு பங்காற்றுவதாகவே கருதுகிறோம்.

இவ்வாறு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x