Published : 31 Mar 2022 06:32 AM
Last Updated : 31 Mar 2022 06:32 AM

சென்னை மாநகராட்சி மண்டல தலைவர் தேர்தல் 15 இடங்களையும் ஆளும் திமுக கைப்பற்றியது: 6 நிலைக் குழுக்களுக்கான தலைவர் தேர்தல் இன்று தொடக்கம்

சென்னை: சென்னை மாநகராட்சியின் 15 மண்டலத் தலைவர் பதவிகளையும் திமுக கைப்பற்றியது. மேலும் 6 நிலைக் குழுக்களுக்கான தலைவரை தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தல் இன்று காலை தொடங்குகிறது

சென்னை மாநராட்சியில் 200 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உறுப்பினர் தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அதில் திமுக 153 இடங்களிலும், அதிமுக 15 இடங்களிலும், காங்கிரஸ் 13, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலா 4, சுயேச்சைகள் 5, இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பாஜக, அமமுக ஆகிய கட்சிகள் தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றன. பின்னர் நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் 74-வது வார்டு கவுன்சிலர் ஆர்.பிரியா மேயராகவும் 169-வது வார்டு கவுன்சிலர் மு.மகேஷ்குமார் துணை மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கான தலைவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நேற்று காலை ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்ற கூடத்தில் நடைபெற்றது. மேயர், துணை மேயர் முன்னிலையில், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நடைபெற்ற தேர்தலில் மொத்தம் உள்ள 15 இடங்களையும் திமுக கைப்பற்றியது. 14-வது மண்டலம் தவிர, இதர 14 மண்டலங்களுக்கான தலைவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வாக்குப்பதிவு

14-வது மண்டலத்தில் மொத்தம் 11 வார்டுகள் உள்ளன. அதில் 8 வார்டுகளில் திமுக கவுன்சிலர்களும், 3 வார்டுகளில் அதிமுக கவுன்சிலர்களும் உள்ளனர். 14-வது மண்டலத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் திமுக சார்பில் ரவிச்சந்திரன், அதிமுக சார்பில் சதீஷ்குமார் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். போட்டி உறுதியானதால் வாக்குப்பதிவு நடைபெற்றது. 11 பேரும் தங்கள் வாக்குகளை செலுத்திய நிலையில், சில கவுன்சிலர்கள் செல்போனுடன் சென்று, வாக்களித்த தாளை படம் பிடித்ததாகவும், மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்றும் அதிமுக வேட்பாளர் சதீஷ்குமார் எழுத்துப்பூர்வமாக ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் புகார் அளித்தார்.

அதை ஏற்றுக்கொண்ட ஆணையர் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிட்டார். வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், 8 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் எஸ்.வி.ரவிச்சந்திரன் வெற்றி பெற்றார்.

இதன்படி நேற்று நடைபெற்ற தேர்தலில் திருவொற்றியூர் மண்டலத்துக்கு தி.மு.தனியரசு, மணலி-ஏ.வி.ஆறுமுகம், மாதவரம்- எஸ்.நந்தகோபால், தண்டையார்பேட்டை- நேதாஜி யு.கணேசன், ராயபுரம்-பி.ராமுலு, திரு.வி.க.நகர்- சரிதா மகேஷ்குமார், அம்பத்தூர்- பி.கே.மூர்த்தி, அண்ணாநகர்- கூ.பி.ஜெயின், தேனாம்பேடடை- எஸ்.மதன்மோகன், கோடம்பாக்கம்- எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வளசரவாக்கம்- நொளம்பூர் வே.ராஜன், ஆலந்தூர்- என்.சந்திரன், அடையார் ஆர்.துரைராஜ், பெருங்குடி- எஸ்.வி.ரவிச்சந்திரன், சோழிங்கநல்லூர்- வி.இ.மதியழகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு, 6 நிலைக் குழுக்களுக்கான உறுப்பினர் தேர்தல் நடைபெற்றது. ஒவ்வொரு நிலைக்கு குழுவிலும் 8 பெண்கள் உறுப்பினராக இடம்பெற வேண்டும். ஆனால் சில நிலைக் குழுக்களுக்கு போதிய எண்ணிக்கையில் பெண் உறுப்பினர்கள் இல்லாத நிலை இருந்தது. அதனால் மாமன்றம் 2 முறை தள்ளிவைக்கப்பட்டது.

இதனிடையே அமைச்சர் பி.கே.சேகர்பாபு ரிப்பன் மாளிகையில், உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி, வராத பெண் உறுப்பினர்களை வரழைத்து போட்டியிட வைத்தார். இறுதியில் போட்டியின்றி 90 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நிலைக்குழுக்களான கணக்குக் குழு, பொது சுகாதார குழு, கல்விக் குழு, வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு, நகரமைப்புக் குழு, பணிகள் குழு ஆகிய 6 குழுக்களுக்கான தலைவரை தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தல் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இப்பதவிகளுக்கான வேட்பாளர்களை திமுக பொதுச்செயலர் துரைமுருகன் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x