Published : 31 Mar 2022 09:41 AM
Last Updated : 31 Mar 2022 09:41 AM
சென்னை: சென்னை மாநகராட்சி 34-வது வார்டில் வீடு ஒன்றுக்கு சுற்றுச்சுவர் அமைக்க திமுக கவுன்சிலர் தரப்பினர் பணம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை மாநகராட்சி 34-வது வார்டு கொய்யாதோப்பு பகுதியில் வசிப்பவர் தேவி. இவரது வீட்டுக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி மேற்கொண்டு வருகிறார். சாலையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் எழுப்புவதாக புகார்கள் வந்ததை அடுத்து, அப்பணியை நிறுத்துமாறு 34-வது வார்டு திமுக கவுன்சிலர் சர்மிளா காந்தியின் கணவர் கருணாநிதி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தேவி என்பவர் சில தினங்களுக்கு முன்பு 34-வது வார்டு கவுன்சிலர் அலுவலகத்தில் கருணாநிதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் தேவி ஆகியோரிடையே நடைபெற்ற வாக்குவாதம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. கவுன்சிலரின் கணவர் பணம் கேட்பதாகவும் பதிவிடப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவில் கவுன்சிலர் அறையில், அவரது இருக்கையில் கவுன்சிலர் சர்மிளா காந்தியின் கணவர் கருணாநிதி அமர்ந்துள்ளார். சர்மிளா காந்தி பக்கத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்துள்ளார். கருணாநிதியிடம் பேசிக்கொண்டிருந்த தேவியிடம் கருணாநிதியின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
அப்போது, பேசும் தேவி "இந்த வார்டுக்கு சர்மிளா காந்தி தான் கவுன்சிலர், அவர் சுவர் கட்டும் பணியை நிறுத்த சொல்லட்டும். அவர்தான் பேச வேண்டும். வேறு யாரும் பேசக்கூடாது. வேறு ஊரிலிருந்து வந்து இங்கு கவுன்சிலராகிவிட்டு, எங்கள் பணியை தடுப்பதா. நல்லது செய்யதான் கவுன்சிலரை தேர்ந்தெடுத்திருக்கிறோம். இந்த விவகாரத்தை முதல்வர் வரை கொண்டு செல்வேன்" என்றார். நீங்கள் தாராளமாக சுவரை கட்டிக்கொள்ளுங்கள் என கருணாநிதி கூறுவதுடன் வீடியோ முடிவடைகிறது.
இதுதொடர்பாக கவுன்சிலர் சர்மிளா காந்தியிடம் கேட்டபோது, "சில தினங்களுக்கு முன்பு கொய்யாத்தோப்பு குடியிருப்போர் நலச்சங்க கூட்டத்துக்கு அழைத்திருந்தனர். நான் அங்கு சென்றபோது, சுமார் 70-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், சாலையை ஆக்கிரமித்து தேவி என்பவர் சுற்றுச்சுவர் அமைப்பதாக புகார் தெரிவித்தனர். அதுதொடர்பாக தேவியிடம் விசாரித்தோம். ஆவணங்களை கேட்டிருந்தோம். அதை வட்டாட்சியருக்கு அனுப்பி, அந்த இடத்தில் ஆக்கிரமிப்பு நடந்துள்ளதா என ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. அதுவரை பணிகளை நிறுத்துமாறு கோரி இருந்தோம். நாங்கள் யாரிடமும் பணம் கேட்கவில்லை. சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT