

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் ஒருவர் தனது திறமையான செயல்பாட்டால் 17 முறை சரக்கு ரயிலில் நிகழவிருந்த விபத்தை தடுத்து அதற்கான பாராட்டுச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளார். ரயில்வேயில் சிறப்பாக பணியாற்றிய அவருக்கு தற்போது சமூக அமைப்பு ஒன்று ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருதை வழங்கி கவுரவித்துள்ளது.
காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியைச் சேர்ந்தவர் நமச்சிவாயம். இவர் ரயில்வே துறையில் தொழில்நுட்பப் பணியில் கடந்த 1974-ம்ஆண்டு மார்ச் 1-ம் தேதி சேர்ந்துள்ளார். மொத்தம் 42 ஆண்டுகள் இந்தத் துறையில் மின்சார கம்பியில் ஏற்படும் குறைகளை சரி செய்யும் பணிகளை கவனித்து வந்துள்ளார். அப்போது சரக்கு ரயிலில் இருக்கும் குறைபாடுகளைக் கண்டறிந்து முன் கூட்டியே எச்சரித்ததன் மூலம், இந்த 42 ஆண்டுப் பணியில் 17 விபத்துகளைத் தடுத்துள்ளார். ‘மேன்ஆப் தே ரயில்வே’ உள்ளிட்ட விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன. இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி ஓய்வுபெற்றுள்ளார்.
ரயில்வே துறையில் பல அரிய சேவைகளைச் செய்து ஓய்வுபெற்ற நமச்சிவாயத்துக்கு ‘ஹியூமர் கிளப் இன்டர்நேஷனல்’ என்றசமூக அமைப்பு தென்கச்சி கோ.சுவாமிநாதன் நினைவாக வழங்கப்படும் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது 2022’ என்ற விருதைஇவருக்கு வழங்கி கவுரவித்துள்ளது. இவரை சமூக ஆர்வலர்கள் பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.